சிறப்பு ஆய்வாளரை சுட்டுக் கொன்ற மர்மக் கும்பல்! போலீஸ் தீவிர வேட்டை!

09 January 2020 அரசியல்
maskedman12.jpg

கன்னியாகுமரியில் இருந்து, கேரளா செல்லும் வழியில் உள்ள களியக்காவிளையில், சிறப்பு ஆய்வாளராக பணிபுரிந்தவரை, மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இது குறித்து, இரு மாநிலப் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களியக்காவிளைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், நேற்று இரவு 9.45 மணியளவில், சிறப்பு ஆய்வாளர் வில்சன் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது, அந்தப் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த மர்ம நபர்கள், வில்சனை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், இரண்டு குண்டுகள் வெடிக்காத நிலையில், இரண்டு குண்டுகள் வில்சன் உடலில் பாய்ந்தது. படுகாயம் அடைந்த வில்சன் சம்பவ இடத்திலேயே, இரத்த வெளத்தில் இறந்தார். பின்னர், அங்கு வந்த போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த மசூதியில் பொருத்தப்பட்டு இருந்த, சிசிடிவி கேமிராவின் வீடியோப் பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், சம்பவத்தினை நேரில் பார்த்தாக கூறப்படும் இளைஞர் ஒருவரையும் போலீசார் விசாரித்தனர்.

தற்பொழுது, இரு மாநிலப் போலீசாரும் இந்த கொலைக் குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக, ஐந்து தனிப்படைப் பிரிவினை அமைத்துள்ளது காவல்துறை. இன்று, மறைந்த ஆய்வாளர் வில்சனுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய குடும்பத்திற்கு இழப்பீடாக பத்து லட்ச ரூபாயினை அறிவித்தார். மேலும், அவருடைய குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசாங்க வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

58 வயதான வில்சன் வருகின்ற மே மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், இவ்வாறு இறந்து இருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

HOT NEWS