அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட பெஜாவர் மடாதிபதியின் உடல்! தலைவர்கள் அஞ்சலி!

30 December 2019 அரசியல்
srivishveshateerthaswamiji.jpg

கர்நாடக மாநிலம், பெஜாவர் மடத்தின் அதிபதியான ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, நேற்று இறையடி சேர்ந்தார். அவரின் பூத உடலுக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி தன்னுடைய இறங்கலைத் தெரிவித்தார்.

88 வயதான விஸ்வேஸ்வரா கடந்த சில வாரங்களாக, நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவருக்குத் தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், உடல்நலம் தேறியதால், அவ்வப்பொழுது மட்டும் மருத்துவமனைக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில், அவருடைய உடல்நிலை திடீரென்று மோசமான நிலையில், அவருடைய கடைசி ஆசைப்படி, பெஜாவர் மடத்தில் உள்ள அதோக்ஷஜ மட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும், அவர் உடலின் பாகங்கள் செயலிழந்து விட்டதால், அவருடைய உடலானது மருத்துவ சிகிச்சையினை ஏற்கவில்லை. இதனால், அவர் காலை 9.20 மணியளவில் உயிரிழந்தார்.

அவருடைய உடலுக்கு, தகுந்த மரியாதைகள் செய்யப்பட்டு, அமர்ந்த நிலையில் அவர் உடல் வைக்கப்பட்டது. அவருடைய உடலினை பொதுமக்களின் பார்வைக்காக பெங்களூர் நேஷனல் கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து, அவருடைய உடலானது பெஜாவர் மடத்தில் சம்பிரதாயப்படி, நல்லடக்கம் செய்யப்பட்டது. ராகுலக் காந்தி, வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உட்பட பலரும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்தனர்.

HOT NEWS