குஜராத்தில் உள்ள கல்லூரி விடுதியில், மாணவிகளின் உடைகளை கழற்றச் சொல்லி, சோதனை நடத்திய சம்பவம், தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் உள்ள ஸ்ரீசஹ்நான்ந்த் கல்லூரியில், ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியின் விடுதியில் பல மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். அங்கு தங்கிப் படிக்கும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் அங்குள்ள கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்களுக்கு தனியாக உணவும், சமைக்கின்றதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், 68 பெண்கள் மாதவிடாய் காலத்தில், கோயிலுக்குள்ளும், சமையலறைக்குள்ளும் சென்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அங்குள்ள விடுதி வார்டன், ஆசிரியை மற்றும் இரண்டு பெண் ஊழியர்கள் ஆகியோர், அந்தப் பெண்களின் ஆடையை கழற்றச் சொல்லி, விசாரித்துள்ளனர்.
இது தற்பொழுது மாபெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தும் உள்ளது. இதனை தற்பொழுது, தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய மகளிர் ஆணையம் முன் வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது மகளிர் ஆணையம். இந்த செயல் நடைபெற்றுள்ளது என நிரூபிக்கப்பட்டால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.