80 மணி நேரப் போராட்டம் விரிவானப் பார்வை! ஆரம்பம் முதல் ஒரு விரிவான அலசல்!

29 October 2019 அரசியல்
savesurjith.jpg

கிட்டத்தட்ட 80 மணி நேரப் போராட்டத்திற்கு பின், சடலமாக மீட்கப்பட்டான் 2 வயது குழந்தை சுர்ஜித்.

கடந்த 25ம் தேதி அன்று மாலை 5.40 மணியளவில், தன்னுடைய தந்தையால் தோண்டப்பட்டு தண்ணீர் கிடைக்காமல் மூடப்பட்ட, 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான் சுர்ஜித்.

திருச்சிக்கு அருகே உள்ள, மணப்பாறையின் நடுக்காட்டுப்பட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. குழந்தை குழிக்குள் விழுந்துள்ளதை அறிந்த அவருடையத் தாய் அலறி அடித்துக் கொண்டு, ஓடி வந்தார். பின், குழந்தை குழிக்குள் இருப்பதை அறிந்து அதிர்ந்த அவர், தன்னுடைய கையால் அக்குழந்தையைப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக, 10 அடியில் விழுந்து கிடந்த குழந்தை 25 அடிக்கு சென்று விட்டது.

இந்தத் தகவலை அறிந்த, தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் வேகமாக குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது, இந்தத் தகவலை அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனிடையே ஆழ்துளைக் கிணற்றில் வீழ்தவர்களை மீட்கும் கருவிகளைக் கண்டுபிடித்த மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடையக் குழந்தையையும், நாமக்கல்லில் உள்ள குழுவினரையும் அழைத்தது தமிழக அரசு.

மணிகண்டனுடைய குழுவினர், குழந்தையின் ஒரு கையில் கயிற்றினைக் கட்டி, மறு கையிலும் கயிற்றைக் கட்டி தூக்க முயற்சி செய்தனர். முதல் முயற்சி பலனளிக்கவில்லை. இரண்டாவது முயற்சியின் பொழுது, இரண்டு கைகளிலும் கயிறு கட்டப்பட்டது. இருப்பினும், குழந்தையை மேலேத் தூக்கும் பொழுது, எதிர்பாராத விதமாக முதல் கயிறு அவிழ்ந்ததால், குழந்தை 25 அடியில் இருந்து 75 அடிக்குச் சென்றுவிட்டது. மேலும், குழந்தையின் தலையில் மண்ணும் விழுந்து விட்டது. அதுவரை, குழந்தையின் தலையும், கைகளும் தெரிந்தன. ஆனால், உள்ளே சென்றதாலும், தலையில் மண் விழுந்ததாலும், குழந்தையினைக் காண இயலவில்லை.

இதனையடுத்து, நாமக்கல் குழுவினர் வைத்திருந்த கருவி மூலம், குழந்தைக்குத் தொடர்ந்து, ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வந்தது. மேலும், அதிருந்து கேமிரா மூலம் குழந்தையினை கண்காணிக்கும் பணி தொடர்ந்தது. குழந்தையின் மூச்சு சப்தம் உட்பட, குழந்தை எழுப்பும் சப்தங்களை மைக் மூலம் கண்காணித்து வந்தனர் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள்.

இதனிடையே மாநில பேரிடர் மீட்புக் குழுவினருக்கும், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் தமிழக அரசுத் தகவல் அனுப்பியது. அவர்கள் வந்ததும், தனியாக குழித் தோண்டி, சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழி தோண்டும் இயந்திரமான ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அந்த இயந்திரம் வரும் பொழுது, 5 இடங்களில் பிரேக் டவுன் ஆனது. மேலும், இரண்டு இடங்களில் ரிக் இயந்திரத்தினை ஏற்றி வந்த லாரி பஞ்சர் ஆனது. பின்னர், ஒரு வழியாக குழி தோண்ட வேண்டிய இடத்திற்கு வந்த ரிக் இயந்திரம், குழி தோண்டும் பணியினை ஆரம்பித்தது. இருப்பினும், ரிக் இயந்திரம் பழுதானது. பின்னர், வேறொரு ரிக் இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த இயந்திரம் வந்து, 40 அடி வரை குழித் தோண்டிய நிலையில், அந்த இயந்திரமும் பழுதானது.

இதனால், சென்னையில் இருந்து புதிய பிளேட் வரவழைக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் குழி தோண்டும் இடத்தில், பாறைகள் இருந்ததால், குழி தோண்டும் பொழுது, குழந்தையின் மீது மண் விழத் தொடங்கியது. இதனால், மிக மெதுவாக குழி தோண்ட ஆரம்பித்தனர். இதனிடையே மழையும் அவ்வப்பொழுது குறுக்கிட்டதால், குழந்தை சுஜித் விழுந்து கிடந்த குழியானது, மண் மூடைகளால், மூடிப் பாதுகாக்கப்பட்டது. பின்னர், தோண்டிய இடத்தில் தடையாக இருந்த பாறையை, குழியில் இறங்கிய அஜித்குமார் என்ற வீரர் வெளியில் எடுத்தார்.

குழந்தை சுர்ஜித் குறித்து, அவ்வப்போது தகவல் அளித்து வந்த வருவாய்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் இரவு 3.00 மணியளவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பொழுது, குழந்தை விழுந்து கிடந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து உள்ளதாகவும், உடல் அழுக ஆரபித்து இருக்கலாம் எனவும் தகவல் தெரிவித்தார். இதனால், அனைவருடையக் கண்களிலும் சோகம் வழிந்தது. தொடர்ந்து, குழி தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட மீட்புத் துறையினர், ஒரு வழியாக குழந்தையின் உடல மீட்டனர். மருத்துவப் பரிசோதனைகள் முடித்த பின்னர், அக்குழந்தையின் உடல், கல்லறைக்கு நேரடியாக எடுத்துச் செல்லப்பட்டது.

உயிரிழந்த குழந்தையின் உடலுக்கு, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். குழந்தையின் மறைவிற்கு, ராகுல் காந்தி டிவிட்டரில் இறங்கல் தெரிவித்துள்ளார்.

HOT NEWS