சாய் ரா நரசிம்மா ரெட்டி திரைவிமர்சனம்!

03 October 2019 சினிமா
syeraareview.jpg

ரொம்ப நாள் ஆச்சு, நம்ம சிரஞ்சீவியை சினிமாவில் பார்த்து. அப்படியே உள்ளார் என்றால், அது ஆச்சர்யமான விஷயம் தான். படமோ வரலாற்றுத் தொடர்புடைய ஆக்ஷன் திரைப்படம்.

அந்தத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக, உடல்நலம் மற்றும் கட்டுடல் ஆகியவைத் தேவை. அவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னுடைய நடிப்பினை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார் எனலாம். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

தன்னை பாளையக்காரனாக ஏற்க மறுத்த, வெள்ளையனை கொல்வது முதல், வீரமரணம் வரை, நரசிம்ம ரெட்டியாக வாழ்ந்துள்ளார் சிரஞ்சீவி. படத்தின் மிகப் பெரிய பலமே, அதன் பிரம்மாண்டம் தான். மிகப் பெரிய அரங்குகள், போர்க் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என அனைத்துமே பார்ப்பவர்களை, சுதந்திரப் போராட்டாக் காலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

வெள்ளையனை கொன்றதும், சென்னையை ஆளும் ஆங்கிலேயர், 300 பேர் கொண்டு படையை ஆயுதங்களுடன் அனுப்பி வைக்கின்றது. அதனையும், இவர் வெல்கின்றார். இவருடைய தைரியத்தைப் பார்த்து, அப்பகுதியில் வாழும் மற்ற பாளையக்காரர்களும் இவருக்குத் துணையாக போராட ஆரம்பிக்கின்றனர். இருப்பினும், எவ்வாறு அவர்கள் வீழ்த்தப்படுகின்றனர் என்பதனை, உணர்வுப்பூர்வமாக கூறியிருக்கின்றனர்.

சிரஞ்சீவிக்கு மனைவியாக நயன்தாரா நடித்துள்ளார். பெயரளவிற்கே அந்தக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில், அப்படத்தின் நாயகி என்றால் அது தமன்னா தான். நடன மங்கையாக வரும் அவர், நரசிம்ம ரெட்டியின் காதலியாகவும் இருக்கின்றார். அவருடனேயே வாழ்கின்றார்.

தமிழில் படத்தினை வெளியிட வேண்டும் என்றால், தமிழ் நடிகர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து இருப்பார்கள் போல. விஜய் சேதுபதியை ஊறுகாய் அளவிற்குத் தான் பயன்படுத்தி உள்ளனர். அதே போல் தான், ஹிந்திக்கு அமிதாப் பச்சன். படம் முழுக்க நரசிம்ம ரெட்டி மட்டும் தான் நம் கண்களுக்குத் தெரிகின்றார்.

படத்தினை ஆரம்பிக்கும் பொழுதே, இது செவி வழிக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் எனக் கூறிவிட்டனர். இதனால், இது உண்மையான கதையா என்ற கேள்வியும் எழுகின்றது. எது எப்படியோ, சிரஞ்சீவியினை தமிழ் மக்கள் விரும்புவது உண்மை. அவர்கள் இப்படத்தினை ரசிப்பார்கள் என்றால், அது மிகையாகாது.

ரேட்டிங் 3.3/5

HOT NEWS