தர்பார் பட நஷ்டம் தொடர்பாக, நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமையாளரான, டி ராஜேந்தர் நேற்று செய்தியாளர்களக்குப் பேட்டியளித்தார்.
தர்பார் பட நஷ்டம் தொடர்பாக, இயக்குநர் ஏஆர்முருகதாஸ் வீட்டிற்கு சென்ற விநியோகஸ்தர்கள், அவரைப் பணம் கேட்டு மிரட்டியதாக, போலீசில் ஏஆர்முருகதாஸ் புகார் அளித்தார். அவருடையப் புகாரினை ஏற்றுக் கொண்ட காவல்துறையானது, 25 அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதற்கு, கடும் கண்டனம் தெரிவிப்பதற்காக செய்தியாளர்களைச் சந்தித்தார் டிராஜேந்தர். அவர் பேசுகையில், சங்கம் என்ற ஒன்று இருக்கையில், அவர் காவல்துறைக்கு சென்றது மாபெரும் தவறு. எவ்விதப் பிரச்சனையாக இருந்தாலும், அவர் சங்கத்தின் மூலமே தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், காவல்நிலையம் சென்றுள்ளார்.
அதனைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கும் சட்டம் தெரியும். எங்களுக்கும் வழக்கறிஞர்களைத் தெரியும். எங்களுக்கும் நீதிமன்றம் தெரியும். நாங்கள் உங்கள் வழக்கினை, நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் எனக் கூறினார். மேலும், அடுத்தப் படத்திற்கு எங்களிடம் நீங்கள் வந்து தான் ஆக வேண்டும். அப்பொழுது நாங்கள் உங்களைக் கவனித்துக் கொள்கின்றோம் எனக் கூறினார். தர்பார் திரைப்படம் 150 கோடி வசூல் செய்துள்ளது என்ற புகைப்படத்தினை, லைகா நிறுவனம் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டிருந்த நிலையில், தற்பொழுது நஷ்டம் என்ற தகவலால் சினிமா வட்டாரமே ஆடிப்போய் உள்ளது.