தமிழக பட்ஜெட் 2020! முழு விவரம் உள்ளே!

14 February 2020 அரசியல்
tnbudget2020.jpg

தமிழகத்தின் மாநில பட்ஜெட்டானது, இன்று காலையில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக, முதலமைச்சரை சந்தித்த அவர், வாழ்த்துக்களைப் பெற்றார்.

இந்த ஆண்டின் தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

ஏழை எளியோருக்கு அன்பு பெட்டகம், எதிரிகளுக்கோ சிம்ம சொப்பனம் ஊழல் கறைபடியா உண்மை தத்துவம். உழைப்பின் பெருமை விதைத்த அறிவின் வித்தகம், புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களையும், தவமாய் தவமிருந்து தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வி, தமிழர்நலன் காக்க தனிச்சுடராய் வந்துதித்த யுகத்தலைவி, தமிழர் இதயங்களை ஆட்சி செய்யும் பெண்ணரசி. இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் வணங்கி, 2020-2021ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கிறேன் என, தன்னுடைய உரையினை, ஓபிஎஸ் ஆரம்பித்தார்.

2019-ம் ஆண்டிற்கான "சிறந்த ஆட்சிக்கான நல் ஆளுமை விருதினை" மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதுடன், IndiaToday பத்திரிக்கையால் தொடர்ந்து 2 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்ற மாநிலம் எனவும் தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2019-20ம் ஆண்டில் 7.27% என மதிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சி விகிதமானது, அனைத்திந்திய அளவில் கணிக்கப்பட்ட 5% -ஐ காட்டிலும் அதிகமாகும். மத்திய வரிகளில், மாநில அரசிற்கான நிதிப் பகிர்வை 42% -லிருந்து 41% ஆக குறைக்க வேண்டுமென, நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ் வளர்ச்சி துறைக்காக, ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. "கீழடி அகழ் வைப்பகம்" அமைக்க ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறைக்காக ரூ.31.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு, ரூ.4315.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2011 ஏப். முதல் 2019 அக். வரை, 24,10,107 இலவச வீட்டுமனை பட்டாக்கள், வீடில்லா ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. உழவர் பாதுகாப்பு திட்டம், ரூ.200.82 கோடியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

2011-12ம் ஆண்டு முதல் 2019-20 ம் ஆண்டு வரை, வரவு செலவு திட்டங்களில் மொத்தம் 715 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் 537 அறிவிப்புகள், முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 161 அறிவிப்புகளுக்கு, தேவையான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டு, பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

விபத்துகளில் காயமடைந்த, ஊனமுற்ற மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டம், விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, 2020-2021ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மைக்காக, ரூ.1360.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காவேரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதற்கட்டமாக, ரூ.7667 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும், 585 நியாய விலை கடைகளை பொங்கல் பரிசு வழங்குவதற்கு அரசு வழி வகை செய்துள்ளது. ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்போர், மாநிலத்தின் எந்தவொரு நியாய விலை கடையிலும் தங்களுக்குரிய பொருட்களை, வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காவிரி முதல் வெள்ளாறு வரையிலான, இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடியில் செயல்படுத்தப்படும்.

காவல் துறைக்கு, மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறைக்கு ரூ.392.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2020-2021 ஆம் ஆண்டிற்கான, வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களின் கட்டுமான பணிகளுக்காக ரூ.112.92 கோடி உட்பட, மொத்தமாக நீதி நிர்வாகத் துறைக்கு ரூ.1403.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு, மாநில அரசின் பங்களிப்பாக 2020-21 ஆம் ஆண்டு வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க, ரூ.966 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி தரத்தை மேம்படுத்த, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ரூ.520 கோடி மதிப்பில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும். கல்வித்துறைக்காக மொத்தம் ரூ.34,841 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலையான கரும்பு உற்பத்திக்கு 2020-2021ம் ஆண்டில், ரூ.12 கோடி மதிப்பில் 74,132 ஏக்கரில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டங்களின் தொழில் நுட்பங்களுடன், புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20ம் ஆண்டில் ரூ.68.35 கோடி நிதி அள்ளிக்கப்பட்டது. 2020-21 ம் ஆண்டில் ரூ.75 கோடி கூடுதல் நிதியுதவியுடன், அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

20 புதிய கால்நடை மருந்தகங்கள் மற்றும் 400 புதிய கிளை நிலையங்களையும் தோற்றுவித்துள்ளது. 2011-12 முதல் 614.57 கோடியில் 2037 புதிய கால்நடை மருத்துவ பிரிவு கட்டடங்கள் கட்டப்பட்டதுடன், ரூ.87.20 கோடியில் 1460 கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டள்ளன.

2011-12 முதல் 1060 கால்நடை கிளை நிலையங்களை கால்நடை மருந்தகங்களாகவும், 10 கால்நடை மருந்தகங்களை கால்நடை மருத்துவமனைகளாகவும், 6 பெரு மருத்துவமனைகளையும், 2 கால்நடை மருத்துவமனைகளையும், கால்நடை பன்முக மருத்துவமனைகளாக தரம் உயர்த்தியும் உள்ளது.

காவிரி வடிநிலப்பகுதிகளில், உள்ள 392 கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள, மாநில அரசின் பங்களிப்பாக ரூ.67.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குடிமராமத்து திட்டத்தின் கீழ், 1,364 நீர்ப்பாசன பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

"உழவர் உற்பத்தியாளர் அமைப்புக் கொள்கை" 2019-20 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020-2021 ம் ஆண்டிற்கான, வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.100.56 கோடி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும்.

வரும் 2020-2021ம் ஆண்டில், ரூ.1844.97 கோடி மதிப்பில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள், நுண்ணீர் பாசன வசதி பெறும். தோட்டக்கலைப் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க, 2020-2021 ம் ஆண்டில் 325 மெ.டன் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காண, ரூ.20 கோடியில் பூச்சி மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2020-2021ம் ஆண்டில், மொத்தம் ரூ.200 கோடி மதிப்பில் 100 வட்டார, 250 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

2010-11ல் நாளொன்றிற்கு 20.67 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் நிறுவனத்தின் சராசரி பால் கொள்முதல், 2019-2020ல் 33.96 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்த, கூடுதலாக 6 பால் ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை, 70% மானியத்துடன் வேளாண் பொறியியல் துறை அமைத்து தரும். வேளாண்மைக்கான மின் இணைப்பிற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு, இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு, தமிழக அரசின் பங்காக ரூ.208.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில், ரூ.218 கோடி மதிப்பில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட, உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கு, ரூ.1033.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், மக்கள் மற்றும் சுகாதார நலத் துறைக்கு ரூ.15863.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ரூ.2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைத்தறி மற்றும் ஜவுளித் துறைக்கு, ஒட்டு மொத்தமாக 2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், ரூ.1224.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க மேம்பாட்டு துறைக்கு, ரூ.607.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகை, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ரூ.70 கோடியில் உணவு பூங்காக்களும், திருவண்ணாமலை, தருமபுரி, மதுரை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் ரூ.50 கோடியில், ஒருங்கிணைந்த உழவர் விற்பனை மைய வளாகங்களும் நிறுவப்படும்.

4997 மீன்பிடி விசைப்படகுகளில், ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும். விழுப்புரம் - அழகன்குப்பம் மற்றும் செங்கல்பட்டு – ஆலம்பரைக்குப்பத்தில், ரூ.235 கோடியிலும் நாகை ஆர்காட்டுத்துறையில் ரூ.150 கோடியிலும், மீன் பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்.

ஆட்சேபணையில்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆகஸ்ட் மாத இறுதிக்குள், வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். இத்திட்டத்திற்காக ரூ.3,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், புதிய அரசு அடுக்குமாடி குடியிருப்பு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, ரூ.1453.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு திருமண நிதியுதவி திட்டத்திற்கு, ரூ.726.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலன் பாதுகாப்பு துறைக்கு ரூ.175.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத் துறைக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், ரூ.419.53 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் ரூ.204.18 ஆதிதிராவிட பழங்குடியின பெண்களின் கல்வி நலனுக்காக, ஒதுக்கீடு செய்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல துறைக்கு, ரூ.1034.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.667.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு, ரூ.218.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறைக்கு ரூ.2716 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், "நிர்பையா திட்டத்தின் கீழ்" பேருந்துகளில் கேமராக்கள் பொருத்துவதற்கு, ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2020-2021ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், வேளாண் துறைக்கு ரூ.11894.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்புகள் மூலம் 2020-21 ஆம் நிதியாண்டில் பயிர்க்கடனாக, மொத்தம் ரூ.11000 கோடி வழங்கப்படும். கடன் தவணைகளை முன் கூட்டியே செலுத்துபவர்களுக்கு, முழு வட்டியையும் தள்ளுபடி செய்ய ஏதுவாக, வரவு செலவு திட்டத்தில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில், 2020-21 ம் நிதியாண்டிலும் துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை, மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படும்.

2020-21 ம் நிதியாண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில், மொத்தம் ரூ.6500 கோடி உணவு மானியத்திற்காகவும், பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்திட கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாக, ரூ.400 கோடியும் வழங்கப்படும்.

தமிழ்நாடு உயிர் பண்ணை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தில், 2-ம் கட்டப் பணிகள் 2020-2021 ஆம் நிதியாண்டில், ரூ.920.5கோடி மதிப்பில் தொடங்கப்படும்.

மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், புலிகள் மற்றும் அவற்றின் வாழிடங்களை பேணுவதில், மாண்புமிகு அம்மா அவர்களது அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, 2014-ம் ஆண்டில் 229 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ல் 264 ஆக அதிகரித்துள்ளது.

கூவம் நதியில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகள், நிறைவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த கட்டத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களும், கூவம், அடையாறு ஆற்றின் அனைத்து வடிகால்களும் ரூ.5439.76 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும்.

பொதுப்பணித்துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுப்பதற்கான பணிகள் ரூ.25 கோடி மதிப்பிலும், ஈரோடு மாவட்டம், ஓடத்துறை ஏரியை மீட்டெடுக்கும் பணிகள் ரூ.3.2 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்படும்.

வன உயிரின பாதுகாப்புக்கான உயர்நிலை, கல்வி நிலையத்திற்கு தொடர் மானியமாக ரூ.1.35 கோடி உட்பட, ரூ.2.5 கோடி மொத்த மானியம் வழங்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடியும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடியும், நிதிபெயர்வாக வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கான, அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் வகையில், "முதலமைச்சரின் கிராம தன்னிறைவு வளர்ச்சித் திட்டம்" எனும் புதிய 5 ஆண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

2020-21ல் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் (ஊரகம்) கீழ், 2,00,000 வீடுகளும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், அனைத்து பழங்குடியின குடும்பங்களுக்கும், வீட்டு வசதி வழங்கும் வகையில் அவர்களுக்கான 8803 வீடுகள் உட்பட, 20,000 வீடுகளும் கட்டித்தரப்படும்.

11 புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு, ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும்.

மாதாவரம் - சோழிங்கநல்லூர், மாதாவரம் - கோயம்பேடு ஆகிய வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவைகள் விரைவில் துவக்கப்படும்.

சென்னை, கோட்டூர்புரம் "Madras School Of Economics" நிறுவனத்திற்கு, சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றப்படும்.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு, ரூ.3099.07 கோடியும் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்காக, ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாற்று திறனாளிகள் நலத்துறைக்கு, ரூ.667.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களை பிரத்யேகமாக விசாரிப்பதற்கென, 16 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழில் துறைக்கு ரூ.2500 கோடி நிதியும், சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.607.62 கோடியும், கைத்தறி துறைக்கு ரூ.1224.25 கோடி நிதியும், தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.153.97 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி துறைக்கு ரூ.20115.58 கோடி ஒதுக்கப்படும். மின் உற்பத்தி - மின் பகிர்மான கழகத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் 50% ஈடு செய்ய ரூ.4265.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.15850.54 கோடி ஒதுக்கப்படும்.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.15,863.37 கோடியும், அறநிலையத்துறைக்கு ரூ.281.17 கோடியும், விளையாட்டு துறைக்கு ரூ.218.66 கோடியும், வேளாண் துறைக்கு ரூ.11,894.48 கோடியும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ரூ.5306.95 கோடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஊரக வளர்ச்சி - ரூ.23161.54 கோடி நீர்ப்பாசனத்திற்காக ரூ.6691.89 கோடி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18540.12 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

HOT NEWS