தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு! முதல்வர் உத்தரவு!

13 April 2020 அரசியல்
edappadicovid19.jpg

நாளையுடன், 21 நாட்கள் ஊரடங்கானது முடிவடையும் நிலையில், தற்பொழுது தமிழகத்தில் உள்ள ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், ஊரடங்கு உத்தரவானது நாளை (ஏப்ரல்14) வரை அமலில் இருக்க உள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் குறையாத காரணத்தினால், தற்பொழுது நடப்பில் உள்ள ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என, பல கட்சிகளும் மாநில அரசுகளும் கூறி வருகின்றன.

இந்நிலையில், இன்று மாலையில், தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், நடப்பில் உள்ள ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. மேலும், பல வசதிகளையும் அறிவித்துள்ளது தமிழக அரசு.

அதன்படி, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விவசாய விளை பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல எந்தவித பாஸ் மற்றும் அனுமதியும் தேவையில்லை. தடையில்லாமல் விளைபொருட்களை எடுத்துச் செல்லலாம்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, மே மாதத்திற்கு வழங்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்.

கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், அடுத்த மே மாதமும் 1000 ரூபாய் வழங்கப்படும். காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரை, பேக்கரிகள் இயங்கலாம். பார்சல் மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS