தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

25 May 2020 அரசியல்
rain1.jpg

அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது அக்னி நட்சத்திர வெயிலானது, கொளுத்தி வருகின்றது. இதனால், அத்தியாவசியப் பணிகளுக்காகக் கூட, பொதுமக்களால் வெளியில் செல்ல இயலவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அம்பன் புயலானது தற்பொழுது கரையைக் கடந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து தமிழகத்தில் மாலை நேரங்களில் கடுமையான காற்று வீசி வருகின்றது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகின்ற 48 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் பலப் பகுதிகளில் காற்றும், மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, தேனியிலும், திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், சேலம், நீலகிரி, தென்காசி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தினை நோக்கி அடுத்த ஐந்து நாட்களுக்குக் கடுமையான காற்று வீசும் எனவும், எனவே வங்கக் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது எனவும் அறிவித்துள்ளது.

HOT NEWS