ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு! முதல்வர் அறிவிப்பு!

30 June 2020 அரசியல்
epscoronaa.jpg

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள், கொரோனா வைரஸ் பரவலானது அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. நேற்று இது குறித்து ஏழாவது முறையாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து, புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த மார்ச் 25ம் தேதி பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. அப்பொழுது முதல் தற்பொழுது வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கானது வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றது. ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கானது நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்டப் பகுதிகள், செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், உள்ளிட்டப் பகுதிகளில் தற்பொழுது அமலில் உள்ள முழு ஊரடங்கானது ஜூலை 5ம் தேதி வரை தொடரும். அதே போல், ஜூலை, 5, 12, 19, 26 உள்ளிட்ட ஞாயிற்றுக் கிழமை நாட்களில், எவ்வி தளர்வும் இன்றி ஊரடங்கானது அமலில் இருக்கும்.

பெருநகர எல்லைக்குட்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர்த்து, மற்றப் பகுதிகளில் உள்ள தகவல்தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் 50% ஊழியர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றது. இருப்பினும், முடிந்த வரை வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணிபுரிய ஊக்கப்படுத்த வேண்டும். மால்களைத் தவிர்த்து, ஷோ ரூம்கள், பெரிய கடைகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்.

குளிர்சாதன வசதி இல்லாத நிலையில், உணவகங்களை இயக்கலாம். அமர்ந்து உண்ணவும் அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்டவைகளில் ஓட்டுநரைத் தவிர்த்து 3 பேர் பயணிக்கலாம். குளிர்சாதன வசதி இல்லாத அழகு நிலையங்கள், சலூன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இறைச்சிக் கடைகள், மீன் கடைகள் உள்ளிட்டவை சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி. டீக்கடைகள், காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்ளிட்டவை காலை ஆறு மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.

1.கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

2.தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

3. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.

4. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

5. வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

6. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

7. உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.

8. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

9. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

10. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.

11. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

HOT NEWS