தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு, ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து, பொது மக்களின் சந்தேகங்களைப் போக்கி வைக்கும் விதத்தில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார்.
அதில் ரெட் அலர்ட் என்பது, பொதுமக்களுக்கானது அல்ல எனவும், அது துறை சார்ந்த எச்சரிக்கை எனவும் கூறினார். தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து தமிழகத்தின் பலப் பகுதிகளில், கடுமையான மழைப் பெய்து வருவதால், பவானி சாகர் அணை வேகமாக நிரம்பி வருகின்றது. இன்று இரவு 102 அடியை அந்த அணை எட்டிவிடும் என்பதால், பவானிசாகர் அணையின், கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணிகளில், காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பெய்து வரும் மழையின் நிலைமை குறித்து, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். அதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.