தமிழ்ராக்கர்ஸ் இணைய தளம் முடக்கம்! ரசிகர்கள் கவலை!

20 October 2020 சினிமா
tamilrockers.jpg

இந்தியாவின் நம்பர் ஒன் இணைய பைரசி வலைதளமான தமிழ்ராக்கர்ஸ் நிறுவனம், நேற்று முடங்கியது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடா, ஆங்கிலம் உள்ளிட்டப் பல மொழிப் படங்களை இணையத்தில் திருட்டுத்தனமாகப் பதிவேற்றம் செய்து வந்த வலைதளம் என்றால், அது தமிழ்ராக்கர்ஸ் வலைதளம் ஆகும். இதனை நடத்தும் குற்றவாளிகளை கட்டாயம் பிடித்தேத் தீருவேன் என, நடிகர் விஷால் கூறினார். ஆனால், அவரால் மட்டுமல்ல தமிழக அரசால் கூட அந்த வலைதளத்தினை ஒன்றும் செய்ய இயலவில்லை.

அவ்வப்பொழுது, அந்த வலைதளத்தின் யூஆர்எல் எனப்படும் முகவரி, தற்காலிகமாக முடக்கப்பட்டாலும், புதிய முகவரியுடன் மீண்டும் வந்தது தமிழ் ராக்கர்ஸ். அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்டவைகளின் நிகழ்ச்சிகள் மற்றும் படங்களைக் கூட விடாமல், தன்னுடைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்தது. இந்த வலைதளம் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பிரபலம் அடைந்தது.

அந்த வலைதளத்தினை முடக்குமாறு, ஐகேன் எனப்படும் சர்வதேச வலைதள முகவரி வழங்கும் நிறுவனத்திற்கு, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. அதனைத் தொடர்ந்து, தற்பொழுது தமிழ்ராக்கர்ஸ் வலைதளமானது, முடக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அந்த வலைதளம் முடக்கப்பட்டு வந்தாலும், தற்பொழுது அதே போல் முடக்கப்பட்டு உள்ளது எனவும், விரைவில் அது புதிய வலைதள முகவரியுடன் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக, அதன் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

HOT NEWS