10ம் வகுப்பு தேர்வு! அந்தந்தப் பள்ளிகளிலேயே நடத்த முடிவு!

16 May 2020 அரசியல்
sengottaiyan1212.jpg

தமிழகத்தில் ஜூன் மாதம் நடைபெற உள்ள, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை, அந்தந்தைப் பள்ளிகளிலேயே நடத்த தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது மே-17க்குப் பிறகும் நீட்டிக்கப்படுவதாக பாரதப் பிரதமர் மோடி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பல அறிவிப்புகளை இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. வருகின்ற ஜூலை மாதம் இந்தியாவிலுள்ள கல்லூரிகள் இயங்க, யூஜிசி அனுமதி அளித்துள்ளது. இதனால், நடத்தப்படாமல் உள்ள பிளஸ் டூ தேர்வுகளை நடத்த அனைத்து மாநில அரசுகளும் வேகம் காட்டி வருகின்றன.

அதே போல், தமிழகம் உள்ளிட்டப் பல மாநிலங்களில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறாமல் உள்ளன. சிபிஎஸ்சி அமைப்பானது, தேர்வு அட்டவணையை, சிபிஎஸ்சி வழியில் படிக்கும் மாணவர்களுக்காக வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க உள்ள பொதுத் தேர்வுகளுக்காக, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அவர் தெரிவித்து இருந்தார். உடனடியாக, பத்தாம் வகுப்புத் தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என, பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த சூழ்நிலையில், மாணவர்களின் உடல்நலத்தினைக் கருத்தில் கொண்டு, தேர்விற்குத் தயாராகி வரும் மாணவர்கள், அவரவர் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளார்.

சமூக இடைவெளியினை கடைபிடிக்கும் விதத்தில், ஒவ்வொரு வகுப்பறையிலும் பத்து மாணவர்கள் தேர்வு எழுத திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்கள் தேர்விற்காக, தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

HOT NEWS