ஜூன் ஒன்றாம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு! அமைச்சர் அறிவிப்பு!

12 May 2020 அரசியல்
sengottaiyan8th.jpg

தமிழகம் முழுவதும், வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறும் என, தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. வருகின்ற மே-17ம் தேதி வரை இந்த ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், இன்னும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்னும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன.

இவைகள் நடைபெறுவது குறித்த அறிப்பினை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார். அதன்படி, வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி அன்று பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்குகின்றது. ஜூன் ஒன்றாம் தேதி தமிழ் தேர்வும், மூன்றாம் தேதி அன்று ஆங்கிலம், ஐந்தாம் தேதி அன்று கணிதம், ஆறாம் தேதி அன்று மாற்று மொழித் தேர்வு, ஜூன் எட்டாம் தேதி அன்று அறிவியல், ஜூன் பத்தாம் தேதி அன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.

ஜூன் 12ம் தேதி அன்று வோகேஷனல் தேர்வும் நடைபெற உள்ளது. மேலும், விடுபட்ட 12ம் வகுப்புத் தேர்வுகள், மற்றும் நடத்தப்படாமல் உள்ள 11ம் வகுப்பிற்கானக் கடைசித் தேர்வுகளுக்கானத் தேர்வுத் தேதிகளும் அறிவிக்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிளஸ் ஒன் தேர்வானது, ஜூன் 2ம் தேதி அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்புக் கடைசித் தேர்வினை ஒருசிலர் எழுதாமல் உள்ளனர். அவர்களுக்கான சிறப்புத் தேர்வுகளும் நடைபெறும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

வருகின்ற 27ம் தேதி அன்று பிளஸ்2 தேர்விற்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. தேர்வுகள் அனைத்தையும், சமூக இடைவெளியுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

HOT NEWS