ஊரடங்குக்குப் பின் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு! அமைச்சர் தகவல்!

20 April 2020 அரசியல்
sengottaiyancorona.jpg

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடிந்த உடன், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெறும் என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக வருகின்ற மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வானது தள்ளிவைக்கப்பட்டது.

இந்த தேர்வானது, எப்பொழுது நடைபெறும் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். பல ஆசிரியர் சங்கங்களும் இந்த ஆண்டிற்கானத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். திமுக தலைவர் முக ஸ்டாலினும், இந்தத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்வினை ரத்து செய்ய முடியாது எனவும், அரசு வேலைகள் உள்ளிட்டப் பலவற்றிக்கு இது அடிப்படையான ஒன்று என்பதால், இந்தத் தேர்வு நடைபெறும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

அவர் கூறுகையில், தற்பொழுது அமலில் உள்ள ஊரடங்கானது நீக்கப்பட்ட உடன், பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவது அவசியம் எனவும் அவர் கூறினார். ஏற்கனவே, இந்தத் தேர்விற்கான கேள்வித்தாள்களும், விடைத் தாள்களும் அந்தந்த மாவட்டக் கல்வித்துறை அலுவலகத்தில், போலீஸ் பாதுகாப்புடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS