டெர்மினேட்டர் டார்க் பேட் திரைவிமர்சனம்!

06 November 2019 சினிமா
terminatordarkfate.jpg

கடைசியா, ஒரு டெர்மினேட்டர் படம் பண்ண ஆசைப்பட்டார் போல அர்னால்ட். அதற்காகவே இந்தப் படத்தினை எடுத்திருப்பார்கள் போல. 1984ம் ஆண்டு, டெர்மினேட்டர் திரைப்படம் முதன் முதலாக உலகம் முழுக்க வெளியானது.

அன்று முதல், இந்தப் படத்தின் பாகங்களை அனைத்து வயது ரசித்துப் பார்க்கின்றனர் என்பது ஆச்சர்யமான விஷயம் தான். மனிதனைக் கொல்ல, எதிர்காலத்தில் இருந்து வரும் இயந்திர மனிதனிடம் இருந்து, அந்த மனிதரை எப்படி இன்னொரு இயந்திர மனிதன் காப்பாற்றுகின்றான் என்பது தான், டெர்மினேட்டர் படத்தின் ஒல் லைன் கதை. இதனையே, மசால் வடை, உளுந்த வடை, கீரை வடை, பருப்பு வடை என பெயர்களையும் நடிகர்களையும் மாற்றி மாற்றி எடுத்து வந்துள்ளனர். அந்த வரிசையில் தற்பொழுது, வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கின்றது அர்னால்டின் டெர்மினேட்டர் டார்க் பேட்.

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்திற்கு பின், அப்படத்தில் வந்தக் கதாப்பாத்திரங்களுக்கு என்ன ஆனது, அர்னால்ட் என்ன ஆனார் என சற்றுத் தெளிவாகவே கூறியுள்ளனர். நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு பெண்ணைக் கொல்ல, எதிர்காலத்தில் இருந்து ஒரு இயந்திர மனிதன் வருகின்றான். அவன் திரவமாக மாறும் தன்மையுடைய அதிநவீன தொழில்நுட்பத்தினை உடைய ரோபோ. இந்த ரோபோவிடம் இருந்து, அந்தப் பெண்ணைக் காப்பாற்ற, சாரா என்ற ரோபோவும் வருகின்றது.

ஒரு கட்டத்தில், சாராவால் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்ததும், அர்னால்டின் உதவியை நாடுகின்றது சாரா. சாராவும், அர்னால்டும் இணைந்து வில்லன் ரோபோவை கொன்றார்களா, அர்னால்டிற்கு என்ன ஆனது, அந்தப் பெண்ணிற்கு என்ன ஆனது, சாராவிற்கு என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.

படத்தினை முழுக்க முழுக்க அர்னால்டிற்காக எடுத்திருந்தாலும், படம் முழுக்க அவர் வரவில்லை என்பது சற்று ஏமாற்றம் தான். இந்தப் படத்தினை நம் மக்கள் சென்று பார்ப்பதே, ஹாலிவுட்டின் முடி சூடா மன்னனாக இருக்கும் அர்னால்டிற்காக தானே. படத்தில் லாஜிக் பார்க்காமல் ரசித்தால், கண்டிப்பாக ரசிக்க முடியும்.

கடந்த டெர்மினேட்டர் 3, 4 மற்றும் 5வது பாகங்களை விட, இந்தப் பாகம் நன்றாகவே இருந்தாலும், அதிலிருந்த வேகம் இதில் இல்லை. படம் முழுக்க, வெடி குண்டு வெடிப்பது, பஞ்ச் டலாக்குகள், துப்பாக்கி சூடு, கார்கள் வெடிப்பது என அனைத்து அம்சங்களும் உண்டு. இருந்தாலும், ஒரு பக்கம் இவைகளைப் பார்த்துப் பார்த்து சலித்துவிட்டதால், அவை நம் கண்களுக்கும், கற்பனைகளுக்கும் உறுத்தலாக உள்ளன. இதுவே, டெர்மினேட்டர் பட வரிசையின் கடைசி பாகமாக இருந்தால், டெர்மினேட்டருக்கு உள்ள மரியாதை தப்பிக்கும்.

ரேட்டிங்: 2/5

HOT NEWS