தி வான்டரிங் எர்த்! படம் ஏன் பார்க்கனும்?

22 September 2019 சினிமா
thewanderingearth.jpg

உங்களுக்கு விண்வெளி சம்பந்தப்பட்ட படங்களைப் பார்க்கப் பிடிக்குமா? அப்போ இந்தப் படத்தை நீங்கள் கண்டிப்பா பார்க்கலாம். இல்லை நீங்கள் கண்டிப்பா பார்க்கணும். அப்படி ஒரு அருமையானப் படம் தான் இந்த தி வான்டரிங் எர்த்.

இந்தப் பூமிக்கு ஆபத்து. கொஞ்சம் விட்டால், புவியானது, விண்வெளியில் தன்னுடையப் பாதையை விட்டு, வேறு ஏதாவது கோளுடன் மோதி சிதறிவிடும். ஏனெனில், சூரியன் தன்னுடைய அழிவினை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில், புவியில், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு உட்பட பலப் பிரச்சனைகள் வருகின்றன. இதனால், உலக நாடுகள் அனைத்தும் இணைந்து, யுனைடெட் எர்த் கவர்ன்மென்ட் என்ற அமைப்பினை உருவாக்குகின்றன. அதன் மூலம், மனிதர்களை பூமிக்கு அடியில் பாதுகாப்பான நகரங்களை உருவாக்கித் தங்க வைக்கின்றன.

அதே சமயம், புவியின் மேற்ப்பரப்பில், பெரிய ராட்சத ராக்கெட் பூஸ்டர்களைப் பயன்படுத்தி, புவியின் சுற்று வட்டப்பாதையை மாற்றி, நிலையான, சூரியன் இருக்கும் அண்டத்தை நோக்கி நகர்த்துகின்றனர். இதனைக் கண்காணிக்க, சர்வதேச விண்வெளி மையம் புவிக்கு வெளியில் உள்ளது. அதில் படத்தின் நாயகனின் தந்தை வேலை செய்கின்றார். அங்கிருந்து கொண்டு புவியின் நிலைமை மற்றும், அதன் பிரச்சனைகளை காண்கின்றனர்.

படத்தின் நாயகன் தன் தங்கையுடன் வாழ்கின்றான். அவர்கள் திருட்டுத்தனமாக, ஒரு ராட்சத டிரக்கினை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். அப்பொழுது எதிர்ப்பாராத விதமாக நிலநடுக்கம் ஏற்படுகிறது. காரணம், புவியானது, வியாழன் கோளின் ஈர்ப்பு விசையால், அதனை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறது.

சிறிது நேரத்தில் வியாழன் கோளில் மோதி, புவியானது முற்றிலும் காணாமலேப் போய்விடும் என்ற நிலையில், அதிலிருந்து எப்படி புவியினை மீட்கின்றனர். புவிக்கு என்னானது. கதாநாயகன் கடைசியில் என்ன ஆனான்? என்பது தான் படத்தின் சுருக்கமான கதை.

இது முற்றிலும் வித்தியாசமான கதை தான். இதுவரைப் பல விண்வெளி சார்ந்த படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவைகளில் பெரும்பாலும் ஒரே கதை தான். ஏலியன் அல்லது வேற்றுக் கிரகத்தினைத் தேடுவதாக இருந்தன. இப்படம், மொத்த பூமியையும் வேறொரு அண்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றனர்.

படம் சீன மொழியில் எடுக்கப்பட்டு இருந்தாலும், ஆங்கிலம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகி உள்ளது. இருப்பினும் தமிழில் படம் வெளியாகவில்லை. இப்படத்தில் பெரும்பாலான விஷயங்கள் உண்மை தான். அதனையே நம் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். இப்படத்தினை பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து இருந்தாலும், அதனை வாங்கியிருப்பது நெட்ப்ளிக்ஸ். இதிலிருந்தே இந்தப் படத்தின், மதிப்பினை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

HOT NEWS