லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இந்திய இராணுவ வீரர்கள் மூன்று பேர் சீன இராணுவத்தினால் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால், பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதம் 5ம் தேதி அன்று, இந்திய இராணுவமும், சீன இராணுவமும் சிறிய மோதலில் ஈடுபட்டனர். பின்னர், 10க்கும் மேற்பட்ட முறைகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரவு நேரத்தில் மீண்டும் மோதல் ஏற்பட்டு உள்ளது.
இந்த மோதலில் இரண்டு இந்திய வீரர்கள் மற்றும் ஒரு இராணுவ உயர் அதிகாரி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதனையொட்டி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.
சீன தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், இரு நாடுகளும் அமைதியான வழியில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், தேவையில்லாத ஒரு தலைப்பட்சமான முடிவினை இந்தியா எடுக்கக் கூடாது என சீன தூதரகம் கூறியுள்ளது.