தெலுங்கானாவில் மற்றொரு துயரம்! ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை பலி!

28 May 2020 அரசியல்
telanganaborewell.jpg

தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை, சடலமாக மீட்கப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம், மேடாக் மாவட்டத்தில் உள்ளது போச்சம்பள்ளி கிராமம். இந்தக் கிராமத்தில் மங்காலி பிக்சாபதி மற்றும் நவீனா ஆகிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒரு குழந்தை தான் சாய் வர்தன்.

இவர்களுக்கு சொந்தமாக, போச்சம்பள்ளி கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு, சமீபத்தில் இடப்பட்ட ஆழ்துளைக் கிணறு உள்ளது. அதில், புதன்கிழமையான நேற்று மாலை ஐந்து மணியளவில் சாய் வர்தன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, கிணற்றிற்காக போடப்பட்ட குழியில் விழுந்துவிட்டான்.

அவனுடைய அழுகுரலைக் கேட்டத் தாய் நவீனா, தான் உடுத்தியிருந்த சேலையை கழற்றி, சாய் மீது வீசி அதனைப் பிடித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், ஒவ்வொரு நிமிடமும் அந்தக் குழந்தை குழிக்குள் சென்று கொண்டே இருந்ததால், நவீனாவில் அவருடையக் குழந்தையைப் பிடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி வருவாய் ஆணையர், தீயணைப்புத் துறை வீரர்கள், மாவட்ட கலெக்டர் எம் தர்மாரெட்டி மற்றும் காவல்துறை ஆணையர் சந்தனா தீப்தி உள்ளிட்டோர் அப்பகுதிக்கு வந்து அக்குழந்தையை மீட்க முயற்சித்தனர். இந்நிலையில், தொடர்ந்து 12 மணி நேரமாக போராடிய தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், அந்தக் குழந்தையின் இறந்த உடலை மட்டுமே மீட்டனர்.

120 அடிக்குள் விழுந்த குழந்தையானது, தொடர்ந்து இருட்டாக இருந்ததால் அழுது கொண்டே இருந்தது. இதனைக் காப்பாற்றும் முயற்சியும் தற்பொழுது தோல்வியில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தால், அந்தக் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

HOT NEWS