இந்தியா விதித்த தடையின் காரணமாக, டிக்டாக் நிறுவனத்திற்கு 45,000 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட உள்ளதாக, தகவல்கள் பரவியுள்ளன.
லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய இராணுவ வீரர்களை, சீன இராணுவம் அத்துமீறித் தாக்கியது. அதில், 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, சீனாவின் பொருட்களைப் புறக்கணிப்போம் என, இந்திய மக்கள் பலரும் போராட்டம் நடத்தினர்.
இந்த சூழ்நிலையில், சீனாவின் பல ஸ்மார்ட்போன் ஆப்களால், இந்தியப் பயனர்களின் தகவல்களுக்கு ஆபத்து என்று இந்திய புலனாய்வுத்துறை கூறியது. இதனையடுத்து, டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு, இந்திய அரசுத் தடை விதித்தது. இதற்கு பலரும் தங்களுடையப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்குப் பதிலளித்துள்ள டிக்டாக் நிறுவனம், நாங்கள் பயனர்களின் தகவல்களை எவ்வித நாட்டின் அரசுடனும் பகிர்ந்து கொள்வதில்லை எனக் கூறியது. மேலும், இந்திய அரசிடம் இது குறித்து மேல்முறையீடு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த சூழ்நிலையில், டிக்டாக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து, புதியத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அரசாங்கம் விதித்துள்ள தடையால், இந்தியாவில் இருந்த 20 கோடி பயனர்களை டிக்டாக் நிறுவனம் இழந்துள்ளது. இதனால், அந்நிறுவனத்திற்கு 45,000 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. டிக்டாக், ஹலோ ஆப், வீகோ வீடியோ எடிட்டிங் உள்ளிட்ட ஆப்களின் தாய் நிறுவனமான ஃபைட் டான்ஸ் நிறுவனத்திற்கு இப்பொழுது விதிக்கப்பட்டுள்ள தடையால், இவ்வளவுப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய தடைக்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.