100 கோடி வழங்கும் டிக்டாக்!

03 April 2020 அரசியல்
tiktok.jpg

பொழுதுபோக்கு நிறுவனமான டிக்டாக் நிறுவனம், தன்னுடைய பங்காக 100 கோடி ரூபாயினை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நிவாரண நிதிக்கு, தங்களால் இயன்ற உதவியினை பொதுமக்களும், நிறுவனங்களும் நிதி அளிக்க வேண்டும் என, பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், டாடா, ரிலையன்ஸ், மாருதி உள்ளிட்டப் பல நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவிற்கானப் பண உதவியினை செய்துள்ளன. இதனிடையே, இந்தியாவில் மிகப் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் டிக்டாக் ஆப்பானது, தங்களுடைய சார்பில், 100 கோடி ரூபாய்க்கு மருத்துவக் கருவிகளை வழங்க முன்வந்துள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்காக 100 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக, 20,675 உபகரணங்கள் வந்துள்ளதாகவும், சனிக்கிழமை அதிகாலைக்குள் 1,80,375 உபகரணங்கள் வரும் எனவும், பின்னர் 2 லட்ச உபகரணங்களும் பொருட்களும் திங்கட்கிழமைக்குள் வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும், இந்திய அரசிடம் வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தான் டிக்டாக்கினை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நம் நாட்டில், சுமார் 25 கோடி பேர் இந்த டிக்டாக் ஆப்பினைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS