டிக்டாக் நிறுவனமானது, தற்பொழுது அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனத்துடன் கைக் கோர்த்து உள்ளது.
டிக்டாக் நிறுவனத்தினை செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் அமெரிக்காவின் நிறுவனங்களால், வாங்கப்படாவிட்டால் கண்டிப்பாக தடை செய்யப்படும் என, அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இதனால், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் நிறுவனம் ஆகியவை, டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இருப்பினும், தன்னுடைய நிறுவனத்தினை விற்க, பைட் டான்ஸ் நிறுவனம் தயாராக இல்லை. இதனால், டிக்டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்படும் என்றுக் கூறப்படுகின்றது. மேலும், இதுபற்றி கருத்துத் தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக்டாக் நிறுவனம் தன்னுடைய ஆஃபரினை நிராகரித்து விட்டதாக தெரிவித்து உள்ளது. இது பற்றி செய்தி வெளியிட்டு உள்ள, ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் அதிரடி தகவலைக் கூறியுள்ளது.
ஆரக்கிள் நிறுவனம், டிக்டாக் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவில் செயல்பட உள்ளதாக, கூறியுள்ளது. டிக்டாக் நிறுவனத்தின் தகவல்கள் மற்றும் டேட்டாபேஸ் உள்ளிட்டவைகளை, ஆரக்கிள் நிறுவனம் மேம்படுத்தி, அதனை கையாள உள்ளது. அதுமட்டுமின்றி, அந்த டிக்டாக் நிறுவனத்தின் பயனர்களினை பாதுகாப்பினையும் மேம்படுத்துவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளது.
டிக்டாக் நிறுவனமும், ஆரக்கிள் நிறுவனமும் தற்பொழுது கைக் கோர்த்து உள்ளதால், விரைவில் அமெரிக்காவில் இதன் மீதான தடை நீக்கப்படலாம் என்றுக் கூறப்படுகின்றது. டிக்டாக் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியில், இந்தியாவின் ஜியோ நிறுவனமும் ஈடுபட்டது. இதனை வைத்துப் பார்க்கும் பொழுது, இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ள டிக்டாக் நிறுவனம், இந்தியாவின் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்தால், விரைவில் அதன் மீதான இந்தியத் தடையும் நீக்கப்படலாம் என்றுக் கூறப்படுகின்றது.