இவர்களுக்கு கொரோனா சிகிச்சை இலவசம்! தமிழக அரசு அறிவிப்பு!

07 April 2020 அரசியல்
edappadicovid19.jpg

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் தற்பொழுது வரை 4426 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 114 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நோயில் இருந்து 326 பேர் மீண்டுள்ளனர். வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 621 பேர் இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அதில், எட்டு பேர் வெற்றிகரமாக நோயில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, தற்பொழுது வருவாய்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறை ஊழியர்கள் எனப் பலரும் இரவுப் பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல்வாதிகளும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்பொழுது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி, மேற்கூறிய பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தேவையான மாஸ்க்குகள், சானிட்டைசர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இவர்களில் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ சிகிச்சை வழங்கப்படும். அதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் என தெரிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரண்டு லட்ச ரூபாய் நிவாரண நிதியாகவும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS