தமிழகத்தில் அனைவருக்கும் 2 முகக் கவசம்! எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

03 June 2020 அரசியல்
epscm.jpg

தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இரண்டு முகக் கவசம் வழங்க, ஆலோசனை நடைபெற்று வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது, ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், பல ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடும் வாய்ப்புகள் உள்ளன. அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, முகஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். அவருடையக் குற்றச்சாட்டிற்கு பதில் கூற விரும்புகின்றேன். 1.76 லட்சம் பிசிஆர் கிட்களை ஆபிசில் வைத்துள்ளனர். மீதமுள்ள 2.71 லட்சம் பிசிஆர் கிட்களை பரிசோதனை மையங்களுக்கு அனுப்பியுள்ளோம். இந்த சூழ்நிலையில், தன்னை முதல்-அமைச்சர் என புகழ்ந்து கொள்கின்றார்.

இந்த சூழ்நிலையிலும் கூட, தன்னை முன்னிலைப் படுத்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளார். நான் இதுவரை, என்னை முன்னிலைப்படுத்தவே கிடையாது. தற்பொழுது வரை 15 லட்சத்து 45 ஆயிரத்து 700 பிசிஆர் கிட்களுக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளன. அதில், மத்திய அரசு 50,000 பிசிஆர் கிட்களும், நன்கொடையாக 53,516 கிட்களும், பெறப்பட்டு உள்ளன. மாநில அரசு பெற்றது 12,55,216 கிட்கள். அதில், தற்பொழுது 4,59,800 கிட்கள் டிஎன்எம்எஸ்சியில் உள்ளது.

7,95,416 கிட்கள் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதில் எவ்வித முறைகேட்டிற்கும் இடமில்லை என்பதைக் கூறிக் கொள்கின்றேன். இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழகம் தான். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து குடும்ப அட்டைத் தாரர்களுக்கும் தமிழக அரசே, இலவசமாக முகக் கவசம் வழங்க பரிசீலனை செய்து வருகின்றது. அதன் மூலம், தமிழகத்தில் உள்ள ஏழு கோடி பேருக்கும், இரண்டு என்ற கணக்கில் சுமார் 14 கோடி முகக்கவசங்களை வழங்க, தமிழக அரசு பரிசீலித்து வருகின்றது என்று பேசியுள்ளார்.

HOT NEWS