கடந்த நான்கு ஆண்டுகளைத் தோண்டும் சிபிசிஐடி! சிக்கும் பெரும் புள்ளிகள் டிஎன்பிஎஸ்சி!

31 January 2020 அரசியல்
tnpscoffice.jpg

கடந்த நான்கு ஆண்டுகளாக, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிப் பெற்றவர்கள் பற்றி, தற்பொழுது சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை செய்ய ஆரம்பித்து உள்ளனர்.

கடந்த ஆண்டு, குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில், இராமேஷ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மீது, முறைகேடுப் புகார் முன்வைக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ரேங்க் பட்டியலில், முதல் நூறு இடங்களில், இந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் 39 பேர் இடம் பிடித்தனர். அதே போல், முதல் 1000 இடங்களில், 100 பேர் இடம் பிடித்தனர்.

இதனால், தேர்வு எழுதியவர்கள் சந்தேகத்தினை எழுப்பினர். இதனடிப்படையில், டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரிக்க ஆரம்பித்தது. முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த முறைகேட்டினை விசாரிக்கும் பொறுப்பானது, சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்த முறைகேட்டினை தற்பொழுது வரை, சிபிசிஐடி நிர்வாகமே விசாரித்து வருகின்றது.

முதற்கட்டமாக, தேர்வு எழுதிய மையங்களில் இந்த விசாரணைத் தொடங்கியது. அங்கு தேர்வு எழுதியவர்கள், மறையும் மையினைப் பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் எழுதிய பின், அவர்களுடைய விடைத்தாளில் உள்ள விடையானது மறைந்துவிடும். பின்னர், டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை அதன் தலைமை அலுவலகத்திற்கு எடுத்தும் செல்லும் பொழுது, விக்கிரவாண்டிக்கு அருகில் அந்த விடைத்தாளில், உண்மையான சரியான விடையானது, இடைத்தரகர்கள் மூலம் பூர்த்தி செயப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடையவர்களாக தற்பொழுது வரை, சுமார் 14க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இதில் மூளையாக செயல்பட்ட ஜெயக்குமார் என்பவரை, தற்பொழுது தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவருடைய வீட்டில் இன்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் அவருடைய வீட்டில், 42 சவரன் நகைகள், 82,000 ரூபாய் ரொக்கப் பணம், செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் 60க்கும் மேற்பட்ட மறையும் மையைக் கொண்ட பேனாக்கள் இருந்ததையும், சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், தற்பொழுது வரை ஜெயக்குமாரைக் கண்டுபிடிக்க முடியாததால், அவரைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும் என, சிபிசிஐடி அறிவித்துள்ளது. மேலும், தகவல் அளிப்பவர்களின் பெயர்களும் ரகசியமாக வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜெயக்குமார் பற்றித் தகவல் கொடுக்க நினைப்பவர்கள் 94981 05810, 94441 56386, 99402 69998, 94438 84395, 99401 90030 என்ற எண்களை தொடர்பு கொண்டு, துப்புக் கொடுக்கலாம்.

டிஎன்பிஎஸ்சி நிர்வாகிகள் மற்றும் இரண்டு வட்டாட்சியளர்களும், தற்பொழுது வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில், பெரிய அரசியல்வாதிகளின் தொடர்பு இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், தற்பொழுது வரை எவ்வித அரசியல்வாதியின் பெயரும் இதில் அடிபடவில்லை.

இந்நிலையில், தற்பொழுது புதிய பிரச்சனை வெடித்துள்ளது. குரூப் 2 தேர்விலும் இது போன்ற முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, இதிலும் இராமேஷ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள், அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற, குரூப்-2 தேர்விலும் இந்த முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில், தற்பொழுது இந்த முறைகேட்டினை விசாரிக்க சிபிஐ முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடியிடம் விளக்கமும், சிபிஐயிடம் விசாரிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.

தற்பொழுது நிலவும் சூழ்நிலையில், மீண்டும் குரூப் 4 தேர்வு நடத்த வாய்ப்பிலை என, டிஎன்பிஎஸ்சி அறவித்ததோடு மட்டுமின்றி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பெயர்களை நீக்கி, மற்ற பிற தேர்வர்கள் உள்ள புதிய ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஒரு வேளை, சிபிஐ வசம் இந்த வழக்கு சென்றால் இது போன்று எத்தனைக் காலம் முறைகேடு நடைபெற்று உள்ளது உள்ளிட்ட, பல விஷயங்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

HOT NEWS