தொடரும் கைதுகள்! டிஎன்பிஎஸ்சி அதிர்ச்சி! மறு தேர்வு நடத்தப்படாது! அமைச்சர் பேட்டி!

29 January 2020 அரசியல்
tnpsc.jpg

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, தொடர்ந்து கைது நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டமாக பலரும் இந்த முறைகேட்டின் காரணமாக, கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே 12 பேர் வரைக் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மேலும் இரண்டு பேரைப் போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சூழ்நிலையின் காரணமாக, டிஎன்பிஎஸ்சியின் மீது நம்பிக்கைக் குறைந்துள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்றுள்ள முறைகேட்டினை கண்டுபிடித்துள்ள நிலையில், இதற்கு முன்னர் இது போன்ற முறைகேடு, நடைபெறாமல் இருந்திருக்குமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது பற்றி, டிஎன்பிஎஸ்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடிய, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சிபிஐ விசாரணைக்கு தற்பொழுது எவ்வித அவசியமும் இல்லை. சிபிசிஐடி விசாரணை நேர்மையாகவே நடைபெற்று வருகின்றது. முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களைத் தவிர்த்து, மற்ற 10,000 பேருக்கு வேலை வழங்கப்படும்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார். மேலும், மறு தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பில்லை எனவும், அவர் விளக்கமளித்தார். இந்த முறைகேட்டின் மூளையாக செயல்பட்ட, இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நபரிடமும் 12 முதல் 15 லட்ச ரூபாய் வரை, கமிஷனாக வாங்கியிருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

HOT NEWS