டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம்! 99 பேரின் மீது வழக்கு! வாழ்நாள் தடை!

24 January 2020 அரசியல்
tnpscoffice.jpg

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 100 பேரில், 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது டிஎன்பிஎஸ்சி.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில், சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களின் ரேங்க் பட்டியலும் வெளியானது. அதில், இராமேஷ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 100 பேர், தரவரிசைப் பட்டியலில் முதல் 1000 இடங்களுக்குள் வந்தனர். மேலும், இந்த நூறு பேரில், 35 பேர் தர வரிசைப் பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் வந்தனர். இதனால், இந்த விஷயத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சார்பில், முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த நூறு பேரும் சென்னையில் உள்ள தலைமை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு, அவர்களிடம் முறையான விசாரணை நடத்தப்பட்டது. மேலும், மாதிரி வினாத்தாள் கொடுக்கப்பட்டு அங்கு ஒரு சிறிய தேர்வும் நடத்தப்பட்டு உள்ளது.

அதில், பலரும் சொதப்பலாக பதில் அளித்து இருக்கின்றனர். இந்நிலையில், அவர்களிடம் சராமாரியாக கேள்விகளும் கேட்கப்பட்டு இருக்கின்றன. அதில், முன்னுக்குப் பின் முரணான பதில்களையே, தேர்வு எழுதியவர்கள் அளித்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களையும், தேர்வு விடைத்தாள் வைக்கப்பட்டு இருந்த கருவூலங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அதன் பிறகு, இந்த முறைகேடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பனை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதில், நூறில் 99 பேர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர் என்று அறிவித்தனர். அவர்களுக்கு வாழ்நாள் தடையினை டிஎன்பிஎஸ்சி விதித்துள்ளது. எனவே, இனி அவர்களால் டிஎன்பிஎஸ்சி தேர்வினை எழுத இயலாது.

மேலும், அவர்கள் எவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்டனர் என்பது பற்றிய அதிர்ச்சிகரமானத் தகவலை அளித்துள்ளது. தேர்வில், சிறப்பு மை கொண்ட பேனாவில் பதில் அளித்துள்ளனர். அந்த மையினால் எழுதினால், ஒரு சில மணி நேரங்களில் பதிலானது அழிந்துவிடும். பின்னர், இடைத்தரகர்கள் அந்த விடைத்தாளினை எடுத்து, சரியானப் பதிலினை அந்த விடைத்தாள்களில் நிரப்பி விடுவர். இவ்வாறு தான், தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளது.

இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்களாக கருதப்பட்ட, வட்டாட்சியர்கள் இரண்டு பேர் உட்பட, பல இடைத்தரகர்களும் கைது செய்யப்பட உள்ளனர். அவர்கள் மீது, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இராமேஷ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் மட்டுமே, முறைகேடு நடைபெற்றுள்ளது என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. மேலும், இந்த 99 பேருக்குப் பதில், அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை, சனிப் பெயர்ச்சி வேலை செஞ்சிருச்சோ?

HOT NEWS