டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு குளறுபடி! அடுத்து என்ன நடக்கும்?

21 January 2020 அரசியல்
tnpsc.jpg

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில், 12 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களின் ரேங்க் பட்டியலை, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டது. அவ்வாறு, வெளியிடப்பட்ட பட்டியலில் இராமேஷ்வரம் கீழக்கறை பகுதியில் உள்ள, தனியார் பயிற்சி நிறுவனத்தினைச் சேர்ந்தவர்களும், அங்கு வந்து தேர்வு எழுதியவர்களும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றனர்.

மேலும், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ரேங்க் பட்டியலில், முதல் நூறு இடங்களில் இந்த பயிற்சி நிறுவனத்தில் படித்த 35 பேரும், முதல் 1000 இடத்திற்குள் 100 பேரும் இடம் பெற்று இருந்தனர். இதனால், டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரினை ஏற்றுக் கொண்ட நிர்வாகம், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அழைத்து, கடந்த 13ம் தேதி அன்று விசாரணை நடத்தியது. அதில், பலர் முன்னுக்குப் பின முரணான தகவல்களை அளித்தனர்.

ஒரு சிலர், என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தனர். அங்கு வந்தவர்களிடம் மறு தேர்வு எழுத தயாரா என்பது உள்ளிட்டக் கேள்விகள் வைக்கப்பட்டன. மேலும், அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது எனவும் கூறப்பட்டது.

இதனையடுத்து, முறைகேடு நடைபெற்றுள்ளதை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஒரு வேளை முறைகேடு நடைபெற்று இருப்பதை கண்டுபிடித்தால், ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் வெளியான ரேங்க் பட்டியலில் இருந்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பெயரினை நீக்கி விட வாய்ப்புகள் உள்ளன.

அல்லது மொத்தமாக அந்தத் தேர்வினையே ரத்து செய்யும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்குப் பதிலாகப் புதிய தேர்வானது அடுத்த நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இரண்டில் எதாவது ஒன்று நடைபெற வாய்ப்புகள் இருக்கின்றன என, டிஎன்பிஎஸ்சி தேர்விற்குப் படிக்கும் மாணவர்கள் நம்புகின்றனர்.

HOT NEWS