டிஎன்பிஎஸ்சி முறைகேடு! சித்தாண்டி கைது! பெரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது அம்பலம்!

04 February 2020 அரசியல்
tnpscoffice.jpg

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களில், முக்கியக் குற்றவாளிகளுள் ஒருவராக கருதப்பட்ட, சித்தாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார்.

தற்பொழுது வரை, இடைத்தரகர்கள் உட்பட 23 பேரினை, சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதில், குரூப் 4 முறைகேட்டிற்கு காரணமாக இருந்த 14 பேரும், குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட, 9 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேடுகளுக்கு, மூளையாக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், தலைமறைவாக இருக்கின்றார். மேலும், மற்றொரு இடைத்தரகராக செயல்பட்ட ஆயுதப்படைக் காவலர் சித்தாண்டி என்பவரையும், போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன் மற்றும் உறவினர் ஜெயராணி உள்ளிட்டோரை, போலீசார் கைது செய்து விசாரித்தனர். இவர்கள் முறைகேடாக, குரூப் 2 தேர்வில் பங்கேற்று, பின் வேலைக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு மூளையாக இருந்த, சித்தாண்டி என்பவர் மீது, நான்கு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் பகுதியில் உள்ள தன்னுடைய தோட்டத்தில் சித்தாண்டி பதுங்கியிருந்துள்ளார். அவரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் முதற்கட்ட விசாரணை செய்துள்ள போலீசார், ஒரு சில தகவல்களை திரட்டியுள்ளனர். அதன் படி, இந்த முறைகேட்டில், தற்பொழுது பெரிய அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பதாக, அவர் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

HOT NEWS