குரூப் 4 தேர்வு மோசடி! கிடுக்குப்பிடி விசாரணை!

25 January 2020 அரசியல்
tnpscoffice.jpg

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக, மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளி, தலைமறைவாக இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வின் ரேங்க் பட்டியல், கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது. இதில், இராமேஷ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள், முதல் நூறு இடங்களுக்குள் 35 பேர் இடம் பிடித்தனர். மேலும், 1000 பேருக்குள் நூறு பேர் இடம் பெற்று இருந்தனர். இதனால், முறைகேடு நடந்திருக்கும் என புகார் எழுப்பப்பட்டது.

இந்த முறைகேட்டினை விசாரித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், அந்த நூறு பேரினையும் அழைத்து, சென்னையில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடத்தியது. அதில் பலரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பினை அறிவித்தது. அதில், குற்றம்சாட்டப்பட்ட 100 பேரில் 99 பேர் முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டது.

அவர்கள் முறைகேட்டில் ஈடுபட உடந்தையாக இருந்த, இரண்டு வட்டாட்சியர்கள் உட்பட மொத்தம் 10 பேரினை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், இந்த முறைகேட்டில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த முறைகேட்டினைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

மாயமாகும் மை

தேர்வு எழுதுவதற்கு, பிரத்யேக மை கொண்ட பேனா பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மையானது, குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் மறைந்துவிடும். பின்னர், அவர்களுடைய விடைத்தாளில், தரகர்கள் சரியானப் பதிலை குறித்துள்ளது கண்டுபிடிகப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேர்வறை மற்றும் கருவூலம் உள்ளிட்டவைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு சீறுடைப் பணியாளர் தேர்விலும், இதே பாணியில் முறைகேடு நடந்துள்ளது என்றப் புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, தற்பொழுது அந்த விவகாரத்தினையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

HOT NEWS