இதுவரை 45 பேர் சிக்கியுள்ளனர்! இன்னும் எத்தனைப் பேர்? பெரிய புள்ளிகள் சிக்குவார்களா?

18 February 2020 அரசியல்
tnpscoffice.jpg

தற்பொழுது வரை டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 45 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அரசாங்கப் பணிகளுக்கான ஆட்களை, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தேர்வுகள் மூலம் தேர்வு செய்து வருகின்றது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள், அவரவர் தகுதிக்கேற்ப பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில், முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து, தீவிர விசாரணை செய்து வருகின்றது சிபிசிஐடி போலீஸ்.

இந்த செயல்களுக்கு முக்கியப் புள்ளியாக இருந்த, தரகர் ஜெயக்குமார் என்பவர் தாமாக முன்வந்து போலீசாரிடம் சரணடைந்தார். அவருடைய பாஸ்போர்ட், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவைகளைப் போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், அவர் சரணடைந்தார். அவரிடம் தற்பொழுது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்தத் தேர்வுகளிலும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதில், பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த அனிதா மற்றும் பூர்ணிமா ஆகியோரையும், இடைத்தரகர் ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பட்டியல், தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கின்றது. தற்பொழுது வரை, இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், பல பேர் சிக்குவார்கள் எனவும், பெரிய புள்ளிகள் சிக்கும் வாய்ப்புகள் உள்ளது எனவும், தேர்விற்கு படிப்பவர்கள் சந்தேகப்படுகின்றனர்.

HOT NEWS