பீகாரில் முழு அடைப்புப் போராட்டம்! ராஷ்டிரிய ஜனதா தளம் அழைப்பு!

20 December 2019 அரசியல்
caaprotest.jpg

பீகாரில் நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, ராஷ்டிரிய ஜனதா தளம் கூறியுள்ளது.

இந்தியா முழுவதும், தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் இயல்வு வாழ்க்கையானது முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக, பல இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், தங்களுடைய மாநிலங்களில் இந்த சட்டத்தினை அமல்படுத்தப் போவதில்லை எனக் கூறியுள்ளனர். இருப்பினும், இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைவருக்குமானது என, மத்திய உள்துறை அமைச்சரகம் அறிவித்துவிட்டது.

இதனையடுத்து, கேரளாவின் பினராய் விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக, பேரணி மற்றும் போராட்டங்கள் அம்மாநில முதல்வர் மம்மதா பேனர்ஜி தலைமையில் நடைபெற்று வருகின்றது. வருகின்ற 23ம் தேதி தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அசாம், ஜார்கண்ட் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் போராட்டமானது, வன்முறையாக மாறியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி, போலீசார் சுட்டனர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கர்நாடகாவின் மங்களூர் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லியில் உள்ள ஜன்தர் மந்தர் பகுதியில், போராட்டக்காரர்கள் குழுமியிருக்கின்றனர். தொடர்ந்து, போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் முழு அடைப்பிற்கு அழைத்துள்ளது. இதனை அக்கட்சியினைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

HOT NEWS