தற்பொழுது, இந்தியாவில் நிலவும் சூழ்நிலையை வைத்துப் பார்த்தால், பிரதமர் கூறிய 5 டிரில்லியன் பொருளாதாரத்தினை எட்டுவது கடினமான செயல் என்று, பாஜவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற சர்வதேச நிர்வாக மேலாண்மை மாநாடு வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதில், மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டார். அதில் அவர் பின்வருமாறு பேசினார்.
எந்த இலக்கை அடையவும், ஒரு தீவிரமான உறுதி வேண்டும். அதனைக் கருத்தில் கொண்டு தான், பிரதமர் மோடி வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவானது, 5 டிரில்லியன் பொருளாதாரத்தினை அடைந்துவிடும் என்றார். உண்மையில் அதற்காக, உள்நாட்டு உற்பத்தியினை அதிகரித்து, இறக்குமதியினைக் குறைக்க வேண்டும். ஆனால், தற்பொழுது அது சாத்தியமான இலக்காக இல்லை என்றாலும், அந்த செயல் முடியாதது ஒன்றும் இல்லை என்று கூறுயுள்ளார்.
உலகின் மிக வளர்ந்து வரும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையின் காரணமாக, இந்தியாவிலும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகின்றது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால், ஐந்து கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலும். இதன் மூலம், இந்தியாவின் உற்பத்தியினை அதிகரிக்க இயலும் என அவர் தெரிவித்தார்.
இவர் தான், ஓட்டிற்காக பாஜக 15 லட்சம் தருவதாக பொய் கூறியது என்று உண்மையைக் கூறினார்.