தற்பொழுது நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தோல்வியடைந்ததால், புதியதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பாதுகாப்பு சங்கம் என்ற ஒன்றினை நடிகர் டி ராஜேந்தர் உருவாக்கி உள்ளார்.
கடந்த வாரம், தமிழகத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இதில் தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் முரளி ராமநாராயணன் அணி வெற்றி பெற்றது. இதில், டிஆர் அணி தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியினை ஏற்காத டிஆர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், இந்தத் தேர்தலில் முறைகேடு ஈடுபட்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தன்னுடைய தோல்வியினை ஏற்றுக் கொள்ளாத டி ராஜேந்தர் தற்பொழுது புதியதாக தயாரிப்பாளர் சங்கத்தினை உருவாக்கி உள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், தயாரிப்பாளர்களின் நலன் கருதி இந்த முடிவினை எடுத்து உள்ளதாகவும், இந்த சங்கத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பாதுகாப்பு சங்கம் எனப் பெயர் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த சஙத்தில் சந்திரபோஸ் மற்றும் ஜேஎஸ்கே சதீஷ்குமார் ஆகியோர் செயலாளர்களாகவும், கே.ராஜன் பொருளாளராகவும், செயல்படுவார்கள் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே, பாரதிராஜாவின் தலைமையில் நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் என்றப் பெயரில், புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.