திட்டம் போட்டு திருடிய கூட்டம்! தட்டித் தூக்கிய போலீஸ்!

04 October 2019 அரசியல்
lalithajewellerytheft.jpg

நேற்று முன்தினம், திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில், லலிதா ஜீவல்லர்ஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை, திருடர்கள் மிகத் தெளிவாக திட்டம் போட்டுத் திருடியுள்ளனர். அவர்களை, தமிழக போலீசார் 7 தனிப்படைகளை வைத்து தேடி வருகின்றனர்.

தற்பொழுது, அவர்கள் திருடும் பொழுது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் அவர்கள் மிக துல்லியமாக நடந்து கொள்கின்றனர். முதலில் ஒருவன், உள்ள வருவதற்கு சிறியதாக உருவாக்கப்பட்டுள்ள துளையின் வழியாக, உள்ளே வருகின்றான். பின்னர், அங்குள்ள அலமாரியில் உள்ள கண்ணாடியினை மெதுவாகத் திறக்கின்றான். பின்னர், அங்கு அலங்காரத்திற்கு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை ஒன்றன் பின் ஒன்றாக, எடுத்து சிவப்பு நிறப் பையில் போடுகின்றான்.

பின், அந்தப் பையினை எடுத்து, துளையின் வெளியே வைக்கின்றான். துளைக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஒருவன், அந்தப் பையினை எடுக்கின்றான். பின்னர், மற்றொருவன், சிவப்பு நிற பை ஒன்றினை எடுத்துக் கொண்டு, உள்ளே வருகின்றான். அவனுமை, இவனுடன் இணைந்து கொண்டு நகைகளை, ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து பைக்குள் வைக்கின்றனர்.

அவர்கள், பொம்மை மாஸ்க்குகளை அணிந்துள்ளனர். உடலில் ஒரு பாகமும், வெளியில் தெரியாத படி அனைத்தையும் மூடிய விதத்தில் உடை அணிந்துள்ளனர். கையில் நீல நிற க்ளவுஸ் அணிந்துள்ளனர். இதனால், அவர்களுடைய கைரேகையை கண்டுபிடிக்க இயலாது. மேலும், அவர்கள் உள்ளே வருவதற்காக உருவாக்கிய துளையினைச் சுற்றிலும், மிளகாய் பொடியினை தூவியுள்ளனர். இதனால், மோப்ப நாய்களால் மோப்பம் பிடித்து, திருடர்களைப் பின் தொடர இயலாது.

இந்த வீடியோவில் போலீசார் பேசுகையில், அவர்கள் உட்கார்ந்திருக்கும் விதத்தினைப் பார்க்கும் பொழுது, வட இந்தியர்களைப் போல உள்ளது எனக் கூறுகின்றனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இதனை வட மாநிலத்தவர்கள் தான் செய்துள்ளனர் எனவும், இரண்டு நாட்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுவோம் எனவும் கூறியுள்ளனர்.

மேலும், இந்தத் திருட்டு சம்பந்தமாக, தனியார் விடுதியில் தங்கியிருந்த வட இந்தியர்கள் ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இவர்களும், அந்த திருடர்கள் வைத்திருந்த பைகளை வைத்திருந்ததால் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

இருப்பினும், எவ்வித உதவிகரமானத் தகவலும் கிடைக்காததால், அவர்கள் எவ்விதக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை எனக் கூறி, அவர்களை விடுதலை செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில், திருச்சியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் பொழுது, திருட்டில் ஈடுபட்ட ஒருவன் மாட்டிக் கொண்டான். அவனிடமிருந்து, கிலோ கணக்கில் நகைகள் இருந்த பையினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவனுடன் இணைந்து, திருடிய மற்றொரு திருடன் போலீசாரின் வாகன சோதனையின் பொழுது, தப்பித்து ஓடிவிட்டான். அவனை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்பொழுது கைதானவரின் பெயர் மணிகண்டன் என்றும், அவரிடம் இருந்து 4 கிலோ 800 கிராம் தங்க நகைகளும், வைர நகைகளும், பிளாட்டினம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தப்பி ஓடிய கூட்டாளியின் பெயர் சுரேஷ் என்றும், அவனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவாரூர் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது, இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அதில், சுரேஷ் போலீசைப் பார்த்ததும் தப்பி ஓடிவிட்டான். மணிகண்டனைப் பிடித்த போலீசார், அவரிடம் இருந்தப் பையில், புதிய நகைகள் இருப்பதை கண்டனர். பின்னர், அந்த நகைகளில் இருந்த பார் கோடுகளும், தொலைந்து போன நகைகளின் பார் கோடுகளும் ஒன்றாக இருந்ததால், மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், விசாரித்ததில், நான் மணிகண்டன் என்றும், சுரேஷ் என்பவர் திருவாரூர் பகுதியில் தங்கு இருக்கின்றார் எனவும் கூறியுள்ளார். சுரேஷ் என்பவர், திருவாரூர் முருகன் என்பவருக்கு சொந்தக்காரர். இந்த முருகன், ஏடிஎம், நகைக்கடை உட்பட பல இடங்களில் திருடி உள்ளதாக, வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மணிகண்டன் மாட்டியது தான் சுவாரஸ்யமானது. ஹெல்மட் இல்லாமல், இரு சக்கர வாகனத்தில் வந்ததால் போலீசார் பிடித்துள்ளது. நாம் மாட்டிக் கொண்டோம் எனப் பயந்து, சுரேஷ் தப்பித்து ஓடியுள்ளார். இதனால் சந்தகமடைந்த போலீசார், மணிகண்டனிடம் விசாரித்ததில் மாட்டிக் கொண்டார்.

திருட்டு நடந்து சரியாக, 48 மணி நேரத்தில், சொன்னதைப் போல, திருடர்களைப் பிடித்து அசத்தியுள்ளது தமிழக போலீஸ். தமிழ்நாடு போலீஸ்னா சும்மாவா!!!

HOT NEWS