மும்பையில் டிஆர்பி மோசடியில் ஈடுபட்டதாக, ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட டிவி சேனல்கள் மீது புகார் எழுந்துள்ளது.
இந்தியாவின் டிவி சேனல்களிடையே, தற்பொழுது டிஆர்பி ரேட்டிங் போட்டி நடைபெற்று வருகின்றது. டிஆர்பியில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காக பல டிவி சேனல்களும், புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். இதில் மும்பையை மையமாகக் கொண்டு செயல்படும் பல டிவி சேனல்கள் குறித்து புகார் எழுந்தது. இந்த டிவி சேனல்களின் டிஆர்பியினை அளவிடுவதற்கு BARC அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு 2000 பாரோ மீட்டர்களை பயன்படுத்தி, டிஆர்பியினை அளவிட்டு வருகின்றது.
அந்த BARC அமைப்பானது, ஹன்சா என்ற நிறுவனத்தினை இந்த டிஆர்பியினை அளவிடுவதற்காக நியமித்தது. இந்த அமைப்பில் வேலை செய்தவர்கள் டிஆர்பியினை அளவிட்டு வந்தனர். இந்நிலையில், ஹன்சா அமைப்பானது, BARC அமைப்பிடம் புதிய புகார் ஒன்றினை அளித்தது. அதன்படி, பல மராத்தி சேனல்கள் டிஆர்பி விஷயத்தில் மோசடியில் ஈடுபட்டு உள்ளது உறுதியாகி உள்ளது. இது குறித்து பேசிய மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், ஆங்கில செய்தி சேனலான ரிபப்ளிக் சேனல் உள்ளிட்ட பல சேனல்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
அவர் பேசுகையில், ஹன்சா அமைப்பில் வேலை செய்த ஊழியர்களிடம் விசாரணை செய்ததில், இரண்டு ஊழியர்கள் டிஆர்பியினை அளவிடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 20 லட்ச ரூபாயினை பறிமுதல் செய்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். ஒரு சில சேனல்கள், ஒரு குறிப்பிட்டப் பகுதிகளில் உள்ளவர்களிடம் பணம் கொடுத்து, பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், தொடர்ந்து எங்கள் சேனலை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் என்றுக் கூறுகின்றனர் எனவும் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரிபப்ளிக் டிவி, எங்கள் மீது தேவையற்ற பழி சுமத்தப்படுவதாகவும், மும்பை கமிஷனர் மீது மானநஷ்ட வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்து உள்ளது.