ஒரு மாதத்திற்கு 400 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை, எங்களுக்கு ஒரு குறிப்பிட்டச் சேனலைப் பார்ப்பதற்கு தருவார்கள் என, மும்பை இளைஞர் கூறியுள்ளார்.
தற்பொழுது இந்தியா அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள விவகாரம் என்றால், அது டிஆர்பி ஊழல் ஆகும். மும்பை மாநகர கமிஷனர் இது குறித்து, செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார். அவர் பேசுகையில், ரிபப்ளிக் டிவி, பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா உள்ளிட்ட சேனல்கள் டிஆர்பி மோசடியில் ஈடுபட்டதாக கூறினார். இதனை டிஆர்பியினை அளவிடும் அமைப்பே கூறியதாகத் தெரிவித்தார்.
இதற்கு ரிபப்ளிக் டிவி மறுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது ஒரு மாதம் முழுக்க ஒரு டிவி சேனலை தொடர்ந்து ஆன் செய்து வைத்திருந்தால், 400 ரூபாய் முதல் 700 ரூபாய் வரையிலும் பணம் வழங்கப்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது. மும்பையின் பலப் பகுதிகளில் வசித்து வருகின்ற ஏழைகளிடம், இந்த டிவி சேனல்களைச் சேர்ந்தவர்கள் செல்கின்றனர். அங்கு வசிப்பவர்களிடம் தொடர்ந்து எங்களுடைய டிவி சேனலை ஆன் செய்து வைக்கும்படி கூறுகின்றனர்.
அவ்வாறு வைத்திருந்தால், மாதம் 400 ரூபாய் முதல் 700 ரூபாய் வரையிலும் தாங்கள் தருகின்றோம் என்றுக் கூறுகின்றனர். இதனையொட்டி, பணமும் வழங்கப்படுகின்றது. இவ்வாறு தான் டிவி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கானது அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், டிவி ஷோரூம்களுக்கு பல ஆயிரம் ரூபாய் தந்து, அங்குள்ள அனைத்து டிவிக்களிலும் ஒரே டிவி சேனல் தெரியும் படி செய்கின்றனர். இவ்வாறு பல நூதன வேலைகளில் ஈடுபட்டு, டிஆர்பியினை உயர்த்தியிருப்பது தெளிவாகி உள்ளது.
இது குறித்து, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், ஒரு நபர் தனக்கு பணம் தந்தாக ஒப்புக் கொண்டு உள்ளார். 400 ரூபாயினை நான் வாங்கினேன் எனவும், எங்கள் வீட்டில் வேறு சேனலை நாங்கள் பார்ப்பதே இல்லை எனவும் கூறியிருக்கின்றார்.