தெலுங்கானாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை, வேலையை விட்டுத் தூக்கிய சந்திரசேகர ராவ்!

07 October 2019 அரசியல்
chandrashekarrav.jpg

தெலுங்கானாவில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 49,500 ஊழியர்களை, கூண்டோடு டிஸ்மிஸ் செய்துள்ளது சந்திர சேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா அரசு.

தெலுங்கானாவில், ஊதிய உயர்வு, டீசல் விலை ரத்து, தெலுங்கானா போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைப்பது தொடர்பாக பலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் போராட்டத்தை அறிவித்தனர், தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள்.

தொடர்ந்து சனி, ஞாயிறு, திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை என மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பதால், பொது மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவர்கள் எனவும், போராட்டத்தைக் கைவிடுமாறும் அரசு தரப்பில் கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தொடர்ந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும், ஊழியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால், கடுப்பான தெலுங்கானா அரசு, வேலைக்கு உடனேத் திரும்பாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இருப்பினும், வெறும் 200 பேர் முதல் 500 பேர் வரை மட்டுமே, வேலைக்குத் திரும்பினர். இதனால், அம்மாநில முதல்வர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்பொழுது, இந்த நான்கு நாட்கள் மூலம் வர வேண்டிய வருவாய், இந்தப் போராட்டத்தால் பறிபோய் உள்ளது. பொது மக்களுக்கு, இப்படியொரு கஷ்டத்தை அளித்த அந்த ஊழியர்களுக்கு இரக்கம் கிடையாது. அவர்களைப் பாரபட்சமின்றி, வேலை விட்டு நீக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்களுக்குப் பதிலாக, தற்பொழுது தனியார் பேருந்துகள், வாடகை ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நீக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பதிலாக, அவர்களுடைய இடத்தில், பயிற்சி பெற்ற ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவர். இதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலும், புதிதாக அமர்த்தப்பட உள்ளவர்கள், எவ்வித சங்கத்திலும் இணையக் கூடாது உட்பட பல நிபந்தனைகளும் விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

HOT NEWS