துருக்கியில் தற்பொழுது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக சுனாமி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
துருக்கியில் இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. கிழக்கு ஏகியான் கடல் பகுதியில் உள்ள கிரிக் தீவு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவு ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சாலைகள், பாலங்கள் தரைமட்டமாகி உள்ளன.
பெரியக் கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன. இதற்குள் பல நூறு பேர் சிக்கித் தவிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. திடீரென்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த எச்சரிக்கைப் போலவே, கிரீக் தீவுகளில் பெரிய அளவில் சுனாமி தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த சுனாமியின் காரணமாக, கடல் நீரானது, கிரீக் தீவுகளுக்குள் அதிகளவில் புகுந்துள்ளதால், மீட்புப் பணிகள் தற்பொழுது துரித கதியில் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இது குறித்து, தற்பொழுது வரை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வத் தகவல்களை வெளியிடவில்லை. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி, எத்தனை பேர் மரணமடைந்து உள்ளனர் என்றத் தகவல்களும் தற்பொழுது வரை வெளியாகவில்லை. இருப்பினும், நடைபெற்றுள்ள சம்பவத்தினை வைத்துப் பார்க்கும் பொழுது, நூற்றுக்கணக்கான நபர்கள் இறந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டின் இஸ்மிர் நகரில் உள்ள கட்டிடங்கள் பலவும் குலுங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி தற்பொழுது வரை, 14 பேர் பலியாகி இருப்பதாகவும், 200க்கும் மேற்பட்ட முறைகள், துருக்கி நாட்டில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் துருக்கி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.