தணிகாச்சலம் மீது மேலும் இரு பிரிவுகளில் வழக்கு!

19 May 2020 அரசியல்
thiruthankichalam.jpg

தன்னிடம் கொரோனா வைரஸிற்கு மருந்து இருப்பதாக, தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பேசி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்தின் மீது, மேலும் இரு பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் உலகளவில் மரணமடைந்து உள்ளனர். ஐம்பது லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், சென்னையைச் சேர்ந்த போலி சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலம், தன்னிடம் கொரோனா வைரஸினைக் குணப்படுத்தும் மருந்து உள்ளதாக பேசி வந்தார். எனக்கு வாய்ப்பளியுங்கள் எனக் கூறி வந்த அவர், வெளிநாடுகளில் இருக்கும் நபர்களைத் தாம் குணப்படுத்தியதாகவும் கூறினார்.

இதனால், இவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு அதிகரித்தது. இந்நிலையில், அவர் நோய் தொற்று தடுப்புச் சட்டத்தின் கீழ் புரளியினைக் கிளப்பியதாகக் கைது செய்யப்பட்டார். அவரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தான் ஒரு சித்த மருத்துவர் எனக் கூறி, எவ்வித முத்திரையும் இல்லாத மாத்திரைகளை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்தது தெரிய வந்தது.

மேலும், ஆர்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பல ஆயிரம் ரூபாயினை வருடாந்திர சந்தா முறையில் வாங்கியதும், அவர்களைக் குணப்படுத்தாமல் இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், அவர் மீது தற்பொழுது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மொத்தம் அவர் மீது, ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், மேலும் இருவர் புகார் அளித்துள்ளதால், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

HOT NEWS