உத்தவ் தாக்ரே மேலவைக்கு போட்டியின்றி தேர்வு!

11 May 2020 அரசியல்
udhavthakrey.jpg

மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே, போட்டியின்றி மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியானது நடைபெற்று வருகின்றது. சிவசேனா பாஜக கூட்டணியில் ஏற்பட்ட பிளவினைத் தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியானது மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது.

எம்எல்ஏவாகப் போட்டியிடாத உத்தவ் தாக்ரேவிற்கு, எம்எல்ஏ ஆவதற்கு ஆறு மாத கால அவகாசமானது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி வழங்கப்பட்டது. இருப்பினும், வருகின்ற மே-28ம் தேதியுடன் இந்த காலக்கெடு முடிவடைகின்றது. அதற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக, ஆளுநர் கோட்டாவில் உள்ள இரண்டு இடங்களுக்கு, உத்தவ் தாக்ரே அனுமதி கோரினார்.

இருப்பினும், மஹாராஷ்டிரா ஆளுநரிடம் இருந்து எவ்வித பதிலும் வராத நிலையில், தேர்தல் ஆணையத்தினை சிவசேனா நாடியது. அதற்கு, மேலவை உறுப்பினருக்கான தேர்தல் நடத்த அனுமதி கோரியது. அதற்கு, தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்தது. அதன்படி, பாஜக சார்பில் நான்கு உறுப்பினர்கள் முன்மொழியப்பட்டனர். சிவசேனா சார்பில் இரண்டு பேர், தேசியவாத காங்கிரஸ் சார்பில் இரண்டு பேர் மற்றும் காங்கிரஸ் சார்பில் ஒருவர் அறிவிக்கப்பட்டனர்.

இதனால், சிவசேனா கட்சியின் தலைவரும், மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்ரே போட்டியின்றி, மஹாராஷ்டிரா மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவருக்கு, அவருடையக் கட்சியினர் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS