ஆந்திர மாநிலம் எலுரு என்ற நகரில், திடீரென்று பரவி வருகின்ற மர்ம நோயால், அங்கு வசித்து வருகின்ற 260 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த சூழலில், அம்மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள எலுரூ என்றப் பகுதியில் திடீரென்று புதிய நோய் ஒன்று பரவி வருகின்றது. இந்த நோயால் 260க்கும் அதிகமானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தற்பொழுது, அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் பலரும் வீடு திரும்பிய நிலையில், 80 பெண்களும், 50 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நோய் குறித்து, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அல நானி, விசாரணை செய்தார். அவர் கூறுகையில், முதலமைச்சர் இது குறித்து தனிப்பட்ட அக்கறைக் காட்டுவதாகவும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றுத் தெரிவித்தார். இந்தப் பாதிப்பால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படாது எனவும் தெரிவித்து உள்ளார். ஆறு வயது சிறுமியின் உடல்நலமானது, மிகவும் மோசமானதன் காரணமாக, விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நோய் குறித்து விசாரிக்கையில், பாதிக்கப்பட்டவர்கள் அந்த நகரின், வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருபவர்கள் எனவும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நோயால் முதியவர்களும், குழந்தைகளுமே அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவர்கள் குழுவானது, அங்கு பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளது.
அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளுக்கோஸ் முதலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம், தற்பொழுது இந்திய அளவில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.