பணத்தால் அடிக்கும் அமெரிக்கா! மற்ற நாடுகள் கவலை!

07 April 2020 அரசியல்
researchmedicine.jpg

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, பல ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடான, அமெரிக்கா தான் அதிகளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த வைரஸ் தொற்றினை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து வருகின்றார். இந்தியாவிடம் மருந்து வேண்டும் எனக் கோரிக்கையும் வைக்கின்றார். இந்நிலையில், தன்னுடையப் பண பலத்தினை தற்பொழுது அமெரிக்க அரசாங்கம் காட்டி வருவதாக, பிரபல செய்தி வலைளதளமான ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் மாஸ்க்குகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பலப் பொருட்களை வாங்குவதற்காக, உலக நாடுகள் அனைத்தும் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில், அனைத்துப் பொருட்களுக்கும், சந்தை விலையை விட, அதிக விலைக்கு வாங்க அமெரிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான, ஜெர்மனியிடம் இருந்து பல மருத்துவப் பொருட்களை வாங்க அமெரிக்கா முன் வந்துள்ளது. அந்நாட்டிடம் இருந்து, மருத்துவ மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்களை வாங்க அதிகளவில் பணம் தர தயாராக இருக்கின்றதாம் அமெரிக்கா. அதற்கான, பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன.

அமெரிக்காவின் எம்எம்எம்.என் நிர்வாக அமைப்பானது, கனடாவிற்கு மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. இதனால், பொருட்கள் அனைத்தும் உள்நாட்டு மக்களுக்குப் பயன்படும் என கூறுகின்றது. மேலும், சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு 20க்கும் மேற்பட்ட கார்கோ எனப்படும் அதிக எடையுள்ள பொருட்களை கையாளும் விமானங்களை அனுப்பி உள்ளது அமெரிக்கா.

அந்த விமானங்களில், அந்நாட்டிற்குத் தேவையான மருத்துவப் பொருட்கள், மருந்துகள், முகக் கவசங்கள், வென்டிலேட்டர்கள் எனப் பலவற்றையும் அதிகளவில் விலைக் கொடுத்து வாங்கிக் குவித்து வருகின்றது. பிரான்சில் இயங்கிக் கொண்டிருக்கும் வானொலிக்குப் பேட்டியளித்த பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர், சந்தை விலையினை விட, மூன்று மடங்கு அதிக விலைக்கு, அமெரிக்கா தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி வருகின்றது எனத் தெரிவித்தார்.

இதனால், அனைத்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், அமெரிக்காவிற்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. அதிக விலைக்குப் பொருட்களை வாங்குபவர்களுக்குத் தான், அதிக முன்னுரிமை வழங்கப்படுவது சாதாரண விஷயமாகும். இதனால், மிகச் சிறிய நாடுகள், தாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல், விழிபிதுங்கி நிற்கின்றன.

Source:www.reuters.com/article/us-health-coronavirus-masks/u-s-big-bucks-turn-global-face-mask-hunt-into-wild-west-idUSKBN21L253

HOT NEWS