2.80 கோடி பேர் வேலை இழந்தனர்! உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்!

24 April 2020 அரசியல்
coronausa19.jpg

அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, இரண்டு கோடியே 80 லட்சம் ஊழியர்களின் வேலை பறிக்கப்பட்டுள்ளதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக, தற்பொழுது வரை சுமார் 27,00,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 7,40,000 பேர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக 1,90,000 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர்.

இந்த வைரஸ் காரணமாக, உலகின் நம்பர் ஒன் வல்லரசு என மார்தட்டிக் கொள்ளும் நாடான அமெரிக்கா தான், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 9,00,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 82,000 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 51,000 பேர் மரணமடைந்து உள்ளனர்.

இன்னும் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், அமெரிக்கா உட்பட பல நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்த வைரஸானது, மேலும் பரவாமல் இருப்பதற்காக அனைத்து நாடுகளும் ஊரடங்கினைப் பின்பற்றுகின்றன. இதனால், பொதுப்போக்குவரத்தும், தனியார் போக்குவரத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இருப்பினும், பொதுமக்கள் அமெரிக்க வீதிகளில் நடமாடிக் கொண்டு தான் இருக்கின்றனர். ஊரடங்கு உத்தரவின் காரணமாக, அமெரிக்க விமான நிறுவனங்கள், போக்குவரத்துத் துறை நிறுவனங்கள், அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், பல லட்சம் பேர் தற்பொழுது வேலை இழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர்.

மொத்தமாக கடந்த ஐந்து வாரங்களையும் சேர்த்து, சுமார் இரண்டு கோடியே 80 லட்சம் பேர், தங்களுடைய வேலையைத் தொலைத்து உள்ளனர். பொது மக்களுக்காக, பல நலத்திட்ட உதவிகளை, அமெரிக்க அரசு அறிவித்து உள்ளது. பல திட்டங்கள் மூலம், பொதுமக்களுக்கு பண உதவி உள்ளிட்டவை கிடைக்கின்றன. ஆனால், மற்ற நாடுகளில் அவ்வாறு செய்ய முடியவில்லை.

இதனால், உலக வர்த்தக ஜிடிபியானது, 3.9% ஆக இருக்கும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. இந்த ஊரங்கு மற்றும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, உலகளவில் இருபத்தாறு கோடியே ஐம்பது லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். அமெரிக்க அரசாங்கம், தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து அறிவித்துக் கொண்டே வருகின்றது.

தற்பொழுது நிலவும் சூழ்நிலைத் தொடர்ந்தால், உணவுப் பஞ்சம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக, உலக வங்கி கவலைத் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் 20% பேர், தங்களுடைய சொந்த நாடுகளுக்கே திரும்பிவிடுவார்கள் எனவும் அது கணித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம் கணிப்பின் படி, இந்த கொரோனா வைரஸால் இருபத்தாறு கோடியே எண்பது லட்சம் பேர் பசியால் கஷ்டப்படுவர் எனவும் அது தெரிவித்துள்ளது.

HOT NEWS