கடந்த வாரம், அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக, ஈரான் நாட்டின் முக்கியத் தலைவரும், படைத் தலைவருமான குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அதற்கு ஈரான் முழுவதும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து, அதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் நிலைகள் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் முன், ஈரானின் கைத் தாழ்ந்துள்ளது. ஈரான் மீது, மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார். இந்நிலையில், ஐநாவிற்கு கடிதம் மூலம் அமெரிக்காவின் நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ஈரான் நாட்டுடன் எவ்விதப் பேதமும் இன்றியும், எவ்வித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்தத் தயார். ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் பொருட்டுத் தான், சுலைமானி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என கூறியுள்ளது. மேலும், தன்னுடைய நாட்டிற்காக தாக்குதல் நடத்த ஐநாவின் 51வது பிரிவு கூறியுள்ளது. அதனையே நாங்கள் பின்பற்றியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. இதனை, ஐநாவிற்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராஃப்ட் தெரிவித்துள்ளார்.
அதே போல், ஈரான் தரப்பிலும், ஐநாவிற்கு கடிதம் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஐநா சாசனத்தின் 51வது பிரிவின் கீழ் தான், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தினோம் எனக் கூறியுள்ளது. மேலும் அந்தக் கடிதத்தில், பொதுமக்கள் மீதோ, அவர்களுடைய சொத்துக்கள் மீதோ இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை. அமெரிக்காவின் இராணுவப் பிரிவுகள் மீதே இந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தினோம் என, ஐநாவிற்கான ஈரான் தூதர் மஜித் தக்த் ராவன்சி குறிப்பிட்டுள்ளார்.