பட்டத்திற்கு மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் சட்டம்!

29 May 2020 அரசியல்
flyingkite.jpg

இனி மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டால், பயன்படுத்தியவர்கள் மீது, குண்டர் சட்டம் பாயும் என, சென்னை மாவட்டக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

தற்பொழுது வேகமாகக் காற்று வீசி வருவதால், பொதுமக்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்தியா முழுவதும், நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளதால், வீட்டில் அடைந்து கிடக்கும் பொதுமக்கள் பட்டம் செய்து பறக்கவிட்டு பொழுதுபோக்குகின்றனர். இந்தப் பட்டத்திற்காக, சாதாரண நூல் முதல், மாஞ்சா நூல் வரைப் பயன்படுத்துகின்றனர். இந்த சாதாரண நூலால் விடப்படும் பட்டத்தினால், எவ்விதப் பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படுவது கிடையாது.

ஆனால், மாஞ்சா நூல் பயன்படுத்தப்பட்ட பட்டமானது, பலரின் உயிருக்கும் உலை வைத்துள்ளது. இந்த நூல், கழுத்தில் சிக்கி, சிறுவன் ஒருவனின் உயிரைப் பறித்த சம்பவம் இன்னும் யாராலும் மறக்க முடியாத வடுவாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, இனி மாஞ்சா நூல் பயன்படுத்தக் கூடாது என, தமிழக அரசு எச்சரித்தது. மாஞ்சா நூலினை தயாரிக்கும் இடங்களும் மூடப்பட்டன.

மாஞ்சா நூல், விற்பது சட்டப்படு குற்றமாகக் கருதப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மாஞ்சா நூல் பயன்படுத்துவது தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனை அறிந்த தமிழகக் காவல்துறையானது, கடுமையான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இது குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இனி யாராவது மாஞ்சா நூலினைப் பயன்படுத்தினாலோ, விற்றாலோ குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என அறிவித்துள்ளார். மேலும், மாஞ்சா நூலினைப் பயன்படுத்தியவர்களை, போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

HOT NEWS