உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் மராமரத்துப் பணியின் பொழுது, 100 சவரன் தங்கப் பொருட்கள் கிடைத்து உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில், குழம்பேஸ்வரர் என்றக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலானது 2ம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மோசமான நிலையில், பாழடைந்து கிடக்கும் இந்தக் கோயிலினை சுத்தப்படுத்தி, மராமரத்து வேலைகளைச் செய்து கும்பாபிஷேகம் செய்ய ஊர் பொதுமக்களும் கோயில் குழுவினரும் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஜேசிபி மூலம் கோயிலின் வாசலில் உள்ள கருங்கல்லால் ஆனப் படிக்கட்டுகளை பெயர்த்து எடுத்தனர்.
அப்பொழுது, அந்தப் படிக்கட்டுக்களுக்கு அடியில், துணியால் சுற்றப்பட்ட நிலையில் பொருட்கள் இருந்தன. அதனை மீட்ட, கோயில் நிர்வாகத்தினர் அதில் என்ன இருக்கின்றது என்றுப் பார்வையிட்ட பொழுது, அவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த துணிக்குள் சுமார் 100 சவரன் அளவிற்கு, தங்க நகைகளும், நாணயங்களும் இருந்தன. அதனைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இந்த விஷயத்தினைக் கேள்விப்பட்ட வருவாய்துறையினர், அந்த நகைகளை எடுத்து செல்ல வந்தனர்.
இருப்பினும், இது புதையல் அல்ல எனவும், இது கோயிலின் நகைகள் எனவும் வாதிட்டனர். இந்த நகைகளைத் தர இயலாது எனவும் அவர்கள் கூறினர். தொடர்ந்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்குப் பின்னர், இந்த நகைகளை கருவூலத்திற்குக் கொண்டு சென்றனர். கோயிலில் நடைபெறுகின்ற திருவிழாக்களின் பொழுது, இந்த நகைகள் அனைத்தும் மீண்டும் கோயிலில் ஒப்படைக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளனர்.