அம்பேத்கர் சிலை உடைப்பு! போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!

26 August 2019 அரசியல்
vedaranyam.jpg

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

வேதாரண்யம் பகுதியில் உள்ள பாண்டியன் என்பவரின் தரப்பினர், அம்பேத்கர் சிலையை உடைத்ததாக கூறப்படுகிறது. அவர் முக்குலத்தோர் புலிகள் அமைப்பின் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருக்கின்றார். அவருக்கும், வேதாரண்யம் பகுதியில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே, நீண்ட காலமாகப் பகை நிலவி வருகிறது.

இந்நிலையில், அவருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் நிலைமை அமைதியான நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பாண்டியன் தன்னுடைய காரினை, காவல்நிலையத்தின் முன் நிறுத்தி வைத்துள்ளார். அதனைப் பார்த்த ராமகிருஷ்ணனின் தரப்பு, அந்தக் காரினை அடித்து நொறுக்கி உள்ளது.

இதனால் பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது. பாண்டியனின் சமூகத்தினரும், ராமகிருஷ்ணனின் சமூகத்தினரும் சண்டையிட ஆரம்பித்துள்ளனர். இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவலர்களும் திணறி உள்ளனர். இதனிடையே பாண்டியனின் சமூகத்தினர், அங்கிருந்த அம்பேத்கரின் சிலையில், உள்ள அவருடையத் தலையினை வெட்டி வீசியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் உண்டானது. போலீசார் கலவரத்தை களைத்தனர். இருப்பினும், தலை உடைந்து விழுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் உட்பட பல அமைப்புகள் இதனைக் கண்டித்துப் போராட்டம் நடத்த உள்ளன. இந்தப் பிரச்சினையின் காரணமாக 51 பேர் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

HOT NEWS