பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க இயலாது என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலானது, முருகப் பெருமானை பற்றி ஆபாசமாக வீடியோ ஒன்றினை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்து முன்னணி அமைப்புகள், பாஜக உள்ளிட்டக் கட்சிகள் இதனை எதிர்ப்பு போர்கொடி உயர்த்தின. இதனிடையே, சம்பந்தப்பட்டவர்களை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தமிழக அரசு.
இந்த சூழ்நிலையில், தற்பொழுது வருகின்ற நவம்பர் 6ம் தேதி அன்று, திருத்தணி தொடங்கி திருச்செந்தூர் வரையிலும் சுமார் ஒரு மாதம் டிசம்பர் 6ம் தேதி வரை, வேல் யாத்திரை செய்ய உள்ளதாக, பாஜக அறிவித்தது. அதற்கான வேலைகளையும் மும்முரமாக செய்து வந்தது. அக்கட்சியின் தலைமை செயலகமான கமலாலயத்திலும் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த சூழலில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கின் மீதான விசாரணையானது, இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொரோனா வைரஸின் 2வது மற்றும் 3வது அலை பரவும் அபாயம் இருப்பதால், இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்றுக் கூறியுள்ளார். இதனை பாஜகவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சமூக வலைதளங்களில் தங்களுடைய ஆதங்கத்தினை கொட்டி வருகின்றனர்.