வெண்ணிலா கபடிக் குழு 2 திரைவிமர்சனம்

14 July 2019 சினிமா
venilakabadikulu.jpg

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வெண்ணிலா கபடிக் குழு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் பாகத்தில் விக்ராந்த் நடித்துள்ளார்.

படத்தினை இரண்டு பாகமாகப் பிரிக்கலாம். ஒன்று முதல் பாதி. மற்றொன்று இரண்டாம் பாதி. முதல் பாதியில் பசுபதி ஹீரோ. இரண்டாம் பாதியில் விக்ராந்த் ஹீரோ. முதல் பாதி, காதல், குடும்ப செண்டிமென்ட், பிளாஷ்பேக். இரண்டாம் பாதி, கபடி, நகைச்சுவை, காதல்.

குற்றாலம் பகுதியில் பஸ் ஓட்டுநராக வருகிறார் பசுபதி. அவரின் மகன் விக்ராந்த். பசுபதியின் மனைவியாக அனுபமா. பசுபதிக்கு கபாடி என்றால் உயிர். ஒரு கண்ணில் குடும்பம் மற்றொரு கண்ணில் கபாடியுமாக நம்மை ரசிக்க வைக்கிறார். கபாடி பார்க்கச் சென்று சஸ்பெண்ட் ஆகி வீட்டிலும் அமர்கிறார். அவர் ஏன் குற்றாலம் வந்தார். அவருடைய உண்மை பிண்ணனி என்ன என, தாய் அனுபமா விக்ராந்திற்குக் கூற, பசுபதியின் சொந்த ஊரான பழனிக்குச் செல்கிறார் விக்ராந்த். இதில் காதல் காட்சிகளும் முதல் பாதியில் வந்து செல்கிறது. படத்தில் பெரிய அளவில் விறுவிறுப்பான காட்சிகள் என எதுவும் கிடையாது. அதனால், நாம் சற்று நிதானமாகவே இதுப் பற்றிப் பேசலாம்.

இரண்டாம் பாதியில் நடிகர் சூரி அறிமுகமாகிறார். முந்தையப் படங்களைப் போல இந்தப் படத்தில் அவருடைய நகைச்சுவை எடுபடவில்லை. சுத்தமான மொக்கை. விக்ராந்த் எப்படி கபடி கற்றுக் கொள்கிறார். எவ்வாறு போட்டிகளில் வெல்கிறார். எதிரிகளை எவ்வாறு வீழ்த்துகிறார். காதலியைக் கைப்பிடித்தாரா என, அனைத்தையும் இரண்டாம் பாதியில் கூறியுள்ளனர். படம் பார்க்கும் பொழுது ஒரு வித அலுப்பு ஏற்படுவது உறுதி.

முதல் பாகத்தில் பாடல்கள் எவ்வளவு அருமையாக இருந்தது என கூற வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு அருமையாக இருக்கும். இந்தப் படத்தில் பாடல்களைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவிற்கு சொதப்பல். பெயருக்காவது ஏதாவது ஒரு பாடலையாவது சிறப்பாக கொடுத்திருக்கலாம்.

HOT NEWS